ஐஐடி மெட்ராஸுக்கு ரூ 110 கோடி நன்கொடை! யார் இந்த சுனில் வாத்வானி?
சென்னை: சென்னை ஐஐடியில் புதிதாக செயற்கை நுண்ணறிவு பள்ளியை தொடங்க முன்னாள் மாணவர் ஒருவர் மட்டும் ரூ 110 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலுக்கான (Data Science) ஆராய்ச்சி பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் மாணவர் சுனில் வாத்வானி ரூ 110 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
இந்த ஆராய்ச்சி பள்ளி இந்தியாவில் AI துறையில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை ஐஐடியில் 1975 ஆம் ஆண்டு சுனில் வாத்வானி படித்து முடித்தார்.
இவர் பட்டப்படிப்பு முடித்தவுடனேயே சுகாதாரத் துறையில் முதலீடு செய்து புதிய தொழிலை தொடங்கினார். கடந்த 50 ஆண்டுகளில் வாத்வானி நிறுவனங்களை பில்லியன் டாலர் நிறுவனங்களாக வளர்த்துவிட்டார். இந்த நிலையில் சென்னை ஐஐடியில் புதிதாக தொடங்கவுள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சயின்ஸ் ஆராய்ச்சி பள்ளிக்கு அதிகபட்சமாக ரூ 110 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்திய ஐஐடிகளில் தனி ஒரு நபர் அதிகமாக நன்கொடை வழங்கியது இதுதான் முதல் முறை. இதுகுறித்து பேசிய சென்ன ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில் புதிதாக தொடங்கப்படும் ஆராய்ச்சி பள்ளியில் AIDA (Artificial Intelligence and Data Science) என்ற பெயரில் பட்டம் பெறலாம்.
இதை தொடங்க காரணமாக இருந்த வாத்வானியின் பெயரை கொண்ட இந்த படிப்பு தொடங்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் B.Tech மற்றும் M.Tech பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்புகளுடன் இங்கிலாந்தின் பர்ஹிம்ஹாம் பல்கலைக்கழகத்துடன் MSc படிப்பு 15 பேராசிரியர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் இதற்கு முன்பு செயற்கை நுண்ணறிவுக்கு என தனிபாடத்திட்டம் இருந்தாலும் அது பாடபிரிவாக செயல்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஆண்டிற்கு ஒரு இளநிலை படிப்பில் 30 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சி பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.