வண்டிய விட்டு இறங்க மாட்டேனு அடம் பிடிச்சாலும் ஆச்சரியப்பட ஒன்னுமில்ல.. மேட்டர் ஏரா 5000பிளஸ் இ-பைக் ரிவியூ
இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உலகில் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் மேட்டர் (Matter)-ம் ஒன்றாகும். பெரும்பாலான மின்வாகன உற்பத்தியாளர்கள் இந்தியாவின் ஸ்கூட்டர் பிரிவை மையாகக் கொண்டு தங்களது தயாரிப்புகளை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால், மேட்டர் நிறுவனமோ தனித்துவமாக இந்தியாவின் எலெக்ட்ரிக் பைக் பிரிவை மையப்படுத்தி செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் தற்போதைய நிலவரப்படி ஏரா (Aera) எனும் பைக் மாடலை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டு உள்ளது. .
மேட்டர் ஏரா 5000 பிளஸ் பைக்கின் ஸ்டைல் எப்படி இருக்கு? “அமைதிக்கு பெயர்தான் சாந்தி” என கூற கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த வார்த்தை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் பொருந்தும். சத்தமே இல்லாமல் மிகவும் அமைதியாக இயங்கும் திறன் கொண்டவையே மின்சார வாகனங்கள் ஆகும். என்னதான் இந்த வாகனம் அமைதியாக இயங்கும் திறன் கொண்டதாக இருந்தாலும், இதன் தோற்றம் மிகப் பெரிய கர்ஜிக்கும் மிருகங்களுக்கு இணையானதாக உள்ளது.
அந்த அளவிற்கு மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்திலேயே ஏரா 5000 பிளஸ் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த வாகனத்தை ஓட்டும்போது, வாடி வாசலில் இருந்து வெளியே வரும் முரட்டுக் காளையை அடக்கிய உணர்வு கிடைத்தாலும் சந்தேகப்பட ஒன்றுமில்லை. அதேவேளையில், இந்த வாகனத்தை இயக்கும்போது, சாலையோரத்தில் உள்ள மிட்டாய் கடையை பார்த்த குழந்தையை போல சிரிப்பையும், மகிழ்ச்சியையும் கிடைக்கும்.
இத்தகைய அனுபவமே எங்களுக்கு மேட்டர் ஏரா 5000 பிளஸ்ஸை இயக்கும்போது கிடைத்தது. மேலும், சாலையில் இந்த வாகனத்தை ஓட்டி சென்றபோது பலர் அந்த வாகனத்தை திரும்பி பார்க்கத் தொடங்கினர். சிலர் வாகனத்தை விரட்டி வந்தும் பார்த்தனர். அந்த அளவிற்கே தனித்துவமான மற்றும் சூப்பரான தோற்றத்தை இந்த வாகனம் கொண்டிருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் பைக்கில் இன்டிகேட்டர்கள் வழங்கப்படவில்லை. வழங்கப்படவில்லை என்றதும் இன்டிகேட்டர் லைட்டுகளே இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். ஃப்யூவல் டேங்க் போன்று இருக்கும் அந்த அணிகலனிலேயே லைட்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுவே பைக்கின் தனித்துவமான தோற்றத்திற்கும் காரணமாக இருக்கின்றது. மேலும், இதன் இறுதியில் 07 என்கிற எண்ணும் இடம் பெற்றிருக்கின்றது.
இவை அனைத்தும் சேர்ந்தே பைக்கின் பக்கவாட்டு பகுதிக்கு ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்குகின்றது. இதுதவிர, இந்த தோற்றத்திற்கு கூடுதல் பிளஸ்ஸாக அமையும் வகையில் இரட்டைத் துண்டு அமைப்புடைய இருக்கை, விநோதமான மற்றும் கூரான அமைப்புடைய ஹெட்லைட், இரட்டை நிறத்திலான முன் பக்க மட்குவார்டு ஆகியவை இருக்கின்றது.
மின்சார மோட்டார் மற்றும் ரேஞ்ஜ் திறன் பற்றிய விபரம்: இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 5 kWh பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனால் ஓர் முழு சார்ஜில் 125 கிமீ வரை ரேஞ்ஜ் தர முடியும். இத்துடன், 10 கிலோவாட் திறன் கொண்ட மின்சார மோட்டாரே ஏரா 5000 பிளஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதனால் அதிகபட்சமாக 14.08 பிஎச்பி வரை வெளியேற்ற முடியும். இது ஓர் கியர்பாக்ஸ் கொண்ட எலெக்ட்ரிக் பைக் ஆகும். இந்தியாவில் வேறு எந்த எலெக்ட்ரிக் பைக்கிலும் கியர்பாக்ஸை உங்களால் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹைப்பர் ஷிஃப்ட் 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இருப்பினும், இதன் ரேஞ்ஜ் திறன் சற்று குறைவு என்பதால் அது மட்டும் கொஞ்சம் கவலையளிக்கக் கூடியதாக இருக்கின்றது. நீங்கள் இந்த பைக்கில் நல்ல ரேஞ்ஜ் திறனை பெற விரும்புகின்றீர்களா, அப்போது ஈகோ மோடே சிறந்தது. இதிலேயே மிக சிறந்த மற்றும் மெதுவான இயக்க அனுபவத்தை பெற முடியும். சிட்டி மோட், நகரங்களுக்குள் பயணிப்பதற்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஓர் மோடே இதுவாகும்.
ஸ்போர்ட் மோட், அதிக மற்றும் உற்சாகமான ரைடு அனுபவத்தை பெற இது மிகுந்த உதவியாக இருக்கும். மணிக்கு 100 கிமீ முதல் 105 கிமீ வரையிலான வேகத்தில் இந்த மோடை பயன்படுத்தும்போது பயணிக்க முடியும். இந்த அதிகபட்ச வேகமே பைக்கின் ரேஞ்ஜ் திறனை, அதாவது, பேட்டரி திறனை விரைந்து உறிஞ்சுகின்றது. ஆகையால், மேட்டர் ஏரா 5000பிளஸ் பைக்கில் முடிந்த அளவு பொறுமையான வேகத்தில் பயணிப்பதே நல்லது.