தொண்டர்கள் வேண்டாம்.. தோழர்கள் என்று அழையுங்கள்: தமிழக வெற்றிக் கழகத்தின் வேண்டுகோள்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளை தோழர்கள் என அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிக்கை வெளியிட்டார். அப்போது அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று பனையூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உட்கட்சி அமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனைகள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

உறுதிமொழி
மேலும், உறுதிமொழியும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ்மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி. அனைவருக்கும் சமவாய்ப்பு, சமஉரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளை தோழர்கள் என அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *