செல்லத்தை கொண்டு வாங்கடா.. டாலரை தூக்கிப்போடும் உலக நாடுகள், ரூபாய்க்கு மவுசு கூடியது..!!
வெளிநாடுகள் உடனான வர்த்தகம் என வரும் போது, நாம் ரூபாயில் வர்த்தகம் செய்ய முடிவதில்லை. பெரும்பாலும் இதற்காக நாம் அமெரிக்க டாலரையே நம்பி இருக்க வேண்டி உள்ளது.
இதன் காரணமாக தான் உலகின் மதிப்பு மிக்க பணமாக அமெரிக்க டாலர் திகழ்கிறது. இது போன்ற வர்த்தகங்களுக்காக நாம் டாலரை வாங்கி இருப்பு வைத்து பயன்படுத்தப்பட வேண்டியுள்ளது. எனவே தான் ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது.
ரூபாயில் வர்த்தகம்: இந்தியாவுடன் ரூபாயில் வர்த்தகத்தை தொடங்க வங்கதேசம், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது நடைபெறும் பட்சத்தில் சர்வதேச வர்த்தகத்தில் பெரும் திருப்புமுனையாக அமைவதோடு ரூபாயின் மதிப்பும் உயர தொடங்கும். மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் இரு தரப்பு வர்த்தகத்தை ரூபாயில் தொடங்குவது குறித்து வங்கதேசம் ,இலங்கை ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என தெரிவித்தார். இந்த நடைமுறையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது அந்த நாடுகளின் விருப்பமாக உள்ளது , வளைகுடா நாடுகளும் இந்த முடிவை எடுத்துள்ளன என கூறியுள்ளார்.
அண்டை நாடுகள் விருப்பம்: உள்நாட்டு செலாவணி மூலம் வர்த்தகத்தை மேற்கொள்வதால் ஏற்படும் பலன்களை பல்வேறு நாடுகளும் உணர தொடங்கியுள்ளன என தெரிவித்த அவர், வர்த்தகத்தில் இருதரப்பு பணத்திற்கு பதிலாக மூன்றாம் தரப்பு பணத்தை பயன்படுத்தி அனைத்து பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட செலவுகளுக்கு வழி வகுக்கிறது என்பதை அண்டை நாடுகள் உணர தொடங்கியுள்ளன என கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகத்துடன் ரூபாயில் வர்த்தகத்தை தொடங்கி இருக்கிறோம் , எனவே இந்த முறையில் வர்த்தகத்தை தொடங்குவதற்கு பல நாடுகள் முன் வரும் என நம்பிக்கை தெரிவித்தார். இது போன்ற ஏற்றுமதி இறக்குமதிகளுக்கு ரூபாயை பயன்படுத்தும் போது சம்பந்தப்பட்ட நாடுகளின் மத்திய வங்கிகளும் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டியுள்ளது.
மேலும் ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் ரூபாய் மூலமான வர்த்தகம் தொடங்குவதற்கு சிறிது காலம் தேவைப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
உலகளவில் ரூபாய் மதிப்பு உயரும்: உள்நாட்டு செலாவணி இல்லாமல் பிற நாட்டு செலாவணியில் நடைபெறும் வர்த்தகத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு குறைகிறது , மேலும் செலாவணியை மாற்றுவதில் சில இழப்புகள் ஏற்படுகின்றன என்பதை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
பிற வெளிநாட்டு செலாவணிகளை விட இந்தியாவின் ரூபாய் மிகவும் ஸ்திரத்தன்மை உடையது என்பதால் ரூபாயின் வர்த்தகத்தை தொடங்க பல நாடுகள் விருப்பம் தெரிவித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அமெரிக்கா டாலர் கையிருப்பை குறைவாக கொண்டுள்ள நாடுகளுக்கு ரூபாயில் நடைபெறும் வர்த்தகம் பலனளிக்க கூடியதாக இருக்கும்.
ஏற்கனவே நேபாளம், பூடானுடன் ரூபாயில் வர்த்தகம் நடைபெறுகிறது. ரஷ்யாவும் ரூபாயில் வர்த்தகம் செய்யவே முன்னுரிமை தருகிறது. தற்போது இலங்கை, வங்க தேசம் ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் இணைந்துள்ளன.
பல்வேறு நாடுகளும் ரூபாயில் வர்த்தகம் செய்ய தொடங்கினால் இந்திய ரூபாய் உலக செலாவணியாக மாற தொடங்கும். இதன்படி வர்த்தகம் செய்வோர் இங்கிருக்கும் வங்கிகளில் உள்ள வோஸ்ட்ரோ கணக்குகள் மூலம் வெளிநாடுகளுக்கு தேவையான பணத்தை செலுத்த வேண்டும். இந்த வங்கிகள் சம்பந்தப்பட்ட நாட்டின் வங்கிகளுக்கு அந்த மாற்றும்.