இனி தமிழ்நாடு எல்லைக்கு கூட வந்துராதீங்க.. தமிழக கிரிக்கெட் கேப்டனை திட்டிய பயிற்சியாளர் ஓட்டம்

தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் கேப்டன் சாய் கிஷோரை பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சனம் செய்து பேசிய அணியின் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி தனது பயிற்சியாளர் பதவியை விட்டு விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சுலக்ஷன் குல்கர்னி மும்பையை சேர்ந்தவர். அவரது பயிற்சியில், சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி 2023 – 2024 ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்றது. ரஞ்சி கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டி வரை முன்னேறியது தமிழ்நாடு அணி. அரை இறுதியில் மும்பை அணியுடன் மோதியது. இந்தப் போட்டி மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த தமிழ்நாடு அணி பேட்டிங்கில் சொதப்பி அரை இறுதியில் படுதோல்வி அடைந்தது.

அந்த தோல்விக்கு பின் பேசிய சுலக்ஷன் குல்கர்னி, மும்பையை சேர்ந்தவன் என்ற முறையில் இந்த போட்டி நடந்த ஆடுகள சூழ்நிலையை கணித்து டாஸ் வென்றால் பந்துவீச்சை தேர்வு செய்யுமாறு தான் கூறியதாகவும், ஆனால் கேப்டன் சாய் கிஷோர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததாகவும், அதனால் டாஸ் நடந்த 9 மணிக்கே தமிழ்நாடு அணி தோல்வி அடைந்து விட்டது என கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் குல்கர்னி.

எந்த ஒரு அணியாக இருந்தாலும் தோல்விக்கு பின் பொது வெளியில் அணியின் உள்விவகாரங்களை பேசக் கூடாது. ஆனால், சுலக்ஷன் குல்கர்னி ஒட்டுமொத்த தோல்விக்கும் சாய் கிஷோர் எடுத்த டாஸ் முடிவு தான் காரணம் என வெளிப்படையாக குற்றம் சுமத்தி இருந்தார்.

இதை அடுத்து தமிழ்நாடு அணியின் முன்னாள் வீரர்கள் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஹேமங் பதானி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சாய் கிஷோருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஸ்ரீகாந்த் ஒருபடி மேலே போய் இனி வெளி மாநில பயிற்சியாளர்களையே நியமிக்கக் கூடாது என்றார்.

இந்த நிலையில் சுலக்ஷன் குல்கர்னி ஈமெயில் மூலமாக தனது பதவி விலகல் கடிதத்தை தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்புக்கு அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு ஏற்றுக் கொள்ளும் என கூறப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *