இன்று மறக்காம வீட்டு வாசலில் காப்பு கட்டு கட்ட வேண்டும் ..! ஏன் தெரியுமா ?
இன்று தமிழர்கள் வீடுகளில் போகி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது . இன்றைய தினம் பித்ருக்களுக்காக அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து வணங்க வேண்டும்.
நாளை பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு முன் வீட்டின் வாசலில் வேப்பிலை, பூலாப்பூ, கருந்துளசி, ஆவாரம்பூ கொத்துகளை கட்டி விடவேண்டும். இதன் மூலம் பூச்சிகள், விஷப்பிராணிகள் வீட்டிற்குள் நுழையா வண்ணம் தடுப்பதாக ஐதீகம்.
காப்பில் கட்டப்பட்ட இலைகள் காய்ந்தாலும் அதன் வாசத்திற்கு விஷப்பூச்சிகள் நெருங்காது. ஒரு வருடம் வரை அதன் வீரியம் நிறைந்திருக்கும் .. இதனாலேயே ஒவ்வொரு பொங்கலுக்கும் இந்தக் காப்பு கட்டை மாற்றுவர். இதுதவிர பொங்கலுக்கு வீடு வெள்ளையடிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும். முந்தையக் காலங்களில் எல்லாவிதக் குறிப்புகளும் பனையோலை ஏட்டில்தான் எழுதப்படும். இலக்கியங்களும், புராணங்களும் இருந்த பனையோலைகளை எடுத்து சிதைந்த ஏடுகள் நீக்கி மீதமிருந்த ஓலைகள் புதிதாகக் கட்டி வைக்கப்படும்.
காப்புக் கட்டு என்றால் என்ன என இன்றைய ஆண்ட்ராய்டு தமிழனுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது இதுவும் ஒரு சடங்கு என விரல் சொடுக்கில் இணைய உலகத்துக்குள் உலா போய்விடலாம். ஆனால், இன்றைய இளைய தலைமுறை இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களின் சடங்குகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலை உணர்ந்துகொண்டு, அடுத்த அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
காப்புக் கட்டு என்பது மூலிகைகள் அடங்கிய முதலுதவி பெட்டி. இத்தனை மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், விஷக்கடி, ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற சிறு சிறு பிரச்னைகளுக்குத் தேவையான மூலிகைகள் வீட்டில் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு.
காப்புக் கட்டில் ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை போன்ற மூலிகைகள் அடங்கியிருக்கும். காலப்போக்கில் பிரண்டை, தும்பை போன்ற மூலிகைகள் அரிதாகிவிட்டன. தற்போது ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை இவை மூன்றும்தான் நவீனக் காப்புக் கட்டில் இடம் பெறுகின்றன.