‘கோலி கிட்ட மட்டும் வச்சுக்காதீங்க’: இங்கிலாந்து அணிக்கு மாஜி வீரர் அட்வைஸ்
India vs England | Virat Kohli: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 25ம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
அறிவுரை
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தற்போதைய இங்கிலாந்து அணி வீரர்களுக்கு வழங்கியுள்ள அறிவுரையில், முன்னணி இந்திய வீரரான விராட் கோலியுடன் வாய்ச் சண்டை மற்றும் மோதலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்டுக்கான போட்காஸ்டில் கிரேம் ஸ்வான் பேசுகையில், “இந்த வீரரிடம் (விராட் கோலி) எதுவும் சொல்ல வேண்டாம் என்று எங்களிடம் முன்பே கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அவர் களத்தில் நடக்கும் வார்த்தைப் போரில் முற்றிலும் மகிழ்ச்சியடைகிறார். மேலும் அவர் மொத்த ஸ்கோரை சேசிங் செய்வதை விரும்புகிறார். ஒயிட்-பால் ஃபார்மெட்டில் அவர் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர் உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்பு எதையும் செய்யவில்லை.
வேகப்பந்து வீச்சாளரான ஸ்டீவன் ஃபின் பந்துகளில் நம்பமுடியாத அளவுக்கு சில பவுண்டரிகளை கோலி விரட்டி இருந்தார். அதனால் பொறுமையை இழந்த ஸ்டீவன் ஃபின் கோலியை வம்பிழுத்தார். அவர் செய்த தவறை உடனடியாக உணரவும் செய்தார். அந்த நேரத்தில் விராட் புலியைப் போல பாய்ந்தார். ஃபின் வீசிய பந்துகளை நொறுக்கி அள்ளினார் கோலி. அவரது ஓவர்களில் மட்டும் இரட்டிப்பாக ரன்களை குவித்தார்” என்று அவர் கூறினார்.
இந்தியா vs இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்: முழு அட்டவணை:-
1வது டெஸ்ட்: ஜனவரி 25–29, ஐதராபாத்
2வது டெஸ்ட்: பிப்ரவரி 2-6, விசாகப்பட்டினம்
3வது டெஸ்ட்: பிப்ரவரி 15-19, ராஜ்கோட்
4வது டெஸ்ட்: பிப்ரவரி 23-27, ராஞ்சி
5வது டெஸ்ட்: மார்ச் 7–11, தர்மசாலா.