“இனி ஆர்சிபி வீரர்களை இந்திய அணியில் எடுக்காதீங்க” ரஜத் படிதார் ஆட்டத்தால் கடும் கொந்தளிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகம் ஆன ரஜத் படிதார் இதுவரை நான்கு இன்னிங்ஸ்களில் மொத்தமே 46 ரன்கள் தான் எடுத்துள்ளார். அதிலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி இருந்தார்.
மூன்றாவது டெஸ்ட்டில் அறிமுகம் ஆகி தன் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த சர்பராஸ் கானுக்கு முன்பாகவே ரஜத் படிதார் இரண்டாவது டெஸ்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டார். அப்போது உள்ளூர் டெஸ்ட்டில் சர்பராஸ் கானை விட குறைந்த பேட்டிங் சராசரி கொண்ட ரஜத்துக்கு வாய்ப்பு கொடுப்பதை சிலர் விமர்சனம் செய்து இருந்தனர்.
எனினும், ரஜத் படிதார் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் ரோஹித் சர்மா அவரையே முதலில் அணியில் அறிமுகம் செய்தார். இரண்டாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் சேர்த்த ரஜத், இரண்டாவது இன்னிங்ஸில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். மூன்றாவது டெஸ்ட்டில் 5 மற்றும் 0 ரன்கள் எடுத்து இருக்கிறார். மொத்தம் 46 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.
மறுபுறம் தாமதமாக வாய்ப்பு பெற்ற சர்பராஸ் கான் தனது முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் எடுத்து, ரஜத் 4 இன்னிங்க்ஸ்களில் சேர்த்த ரன்களை விட கூடுதலாக ரன் சேர்த்து இருக்கிறார். இதை அடுத்து ரஜத் படிதார் குறித்து ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ரஜத் படிதார் இடம் பெற்று இருக்கிறார். அந்த அணியை ராசி இல்லாத அணியாக கிண்டல் செய்யும் ரசிகர்கள், தற்போது அந்த அணி வீரர்களை இனி இந்திய அணியில் தேர்வு செய்யவே வேண்டாம் என கடந்த கால உதாரணங்களை காட்டி விமர்சனம் செய்து வருகிறார்கள்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரஜத் படிதார் சரியாக ரன் குவிக்காத போதும் ரோஹித் சர்மா 131, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை 445 ரன்கள் எட்டச் செய்தனர். அடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 319 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 104 ரன்கள் குவித்து முதுகு வலி காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். சுப்மன் கில் 65 ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார்.