பெற்றோர்களின் கவனக்குறைவால் எலி மருந்து பாக்கெட் கிடந்த தண்ணீரை குடித்த சிறுவன்..!

தூத்துக்குடி சொக்கன்குடியிருப்பு வடக்கு ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் 2-வது மகன் விக்னேஷ் (13), பக்கத்து ஊரான விஜயராமபுரம் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் சம்பவத்தன்று வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தான்.

பின்னர் விக்னேஷ் நண்பர்களுடன் விளையாடச் சென்று விட்டு, இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தான். அப்போது அவனுக்கு தாகமாக இருந்ததால், வீட்டில் சிறிய பாத்திரத்தில் இருந்த தண்ணீரை குடித்தான். ஆனால் அந்த பாத்திரத்துக்குள் எலி மருந்து பாக்கெட் கிடந்தது. எனினும் விக்னேஷ் அவசரத்தில் அதனை சரியாக கவனிக்காமல், அந்த பாக்கெட்டை வெளியே எடுத்து போட்டு விட்டு தண்ணீரை குடித்து சென்றான்.

சிறிது நேரத்தில் சிறுவன் விக்னேசுக்கு வாந்தி ஏற்பட்டது. உடனே அவனிடம் குடும்பத்தினர் விசாரித்தனர். அப்போது விக்னேஷ் எலி மருந்து பாக்கெட் கிடந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீரை குடித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே விக்னேஷை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *