ஈசியான காலை உணவு.. நாவூற வைக்கும் புதுமையான ஓட்ஸ் பாயாசம் ரெசிபி.!

அனைத்து வயதினருக்கும் பிடித்த காலை உணவாக ‘ஓட்ஸ்’ உள்ளது.
இந்திய உணவில் பிரதானமாக உள்ள ஓட்ஸ் அதன் உடல் எடையைக் குறைக்கும் பண்புகளுக்காக பெயர்பெற்றது. மேலும் இதை பல மருத்துவர்கள் நீரிழிவு நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதன் காரணமாக இது முக்கியத்துவம் பெற்றது.
இது மிக விரைவாக செய்யக்கூடியது மற்றும் எளிதாக ஜீரணிக்க உகந்தது.இதனுடன் சில பழங்கள் மற்றும் நட்ஸ்கள் சேர்ப்பதால் இதை ஆரோக்கியமான காலை உணவாக மாற்றலாம்.இதை வைத்து ஓட்ஸ் கேசரி, ஓட்ஸ் உப்மா, ஓட்ஸ் தோசை, ஓட்ஸ் இட்லி, ஓட்ஸ் பாயசம், ஓட்ஸ் வடை போன்ற ஏராளமான இந்திய ரெசிபிகள் உள்ளன.
இங்கே நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஓட்ஸ் பாயசம் ஆகும். இதை மிகவும் விரைவாகவும், சுவையாகவும் தயாரிக்கலாம்.இதை 8 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மற்றும் வயதானவர்களுக்கு கூட பாதுகாப்பாக கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் – ½ கப்
பால் – 1 ½ கப்
சர்க்கரை – ½ கப் (தேவைப்பட்டால்)
நெய் – ½ கப் (தேவைப்பட்டால்)
முந்திரி – தேவைக்கேற்ப
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
செய்முறை :
முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்றி அதில் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
பிறகு அதே கடாயில் அரை கப் ஓட்ஸ் சேர்த்து மிதமான தீயில் அதையும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.ஓட்ஸை பொன்னிறமாக வருத்தவுடன் பால் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். ஓட்ஸ் மற்றும் பால் இரண்டும் கெட்டியாகும் வரை சமைக்கவும். அடுத்து அதில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
குறிப்பு : உங்களுக்கு தேவையென்றால் சர்க்கரை சேர்த்து அது கரையும் வரை கலக்கவும். இறுதியாக தேவைப்பட்டால் சிறிது நெய் ஊற்றி கிளறி இறக்கினால் சுவையான ஓட்ஸ் பாயசம் தயார்…இந்த ஓட்ஸ் பாயசத்தை முந்திரி பருப்புடன் அலங்கரித்து சூடாக அனைவருக்கும் பரிமாறுங்கள்..