பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழக காங்கிரசில் பொறுப்பு: ஊடகம், தகவல் தொடர்புத்துறை தலைவராக நியமனம்

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகம், தகவல் தொடர்பு துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் நேற்று வெளியிட்டார்.
சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் நாட்டின் பொருளாதாரம், நிதி நிலைமை, நிதி மேலாண்மை வழிகாட்டுதல்கள் குறித்த சமூக வலைதள வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்.
அது மட்டுமல்லாமல் சென்னையில் வசிக்கும் இளைஞர்கள் திருமணம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் எனச் சொல்லி டிரெண்டானவர் ஆவார். ஆனந்த் சீனிவாசன் சமீப காலமாகவே ஒன்றிய அரசின் பொருளாதாரம் குறித்து புள்ளி விவரங்களை கொண்டு, பாஜ அரசை கடுமையாக விமர்சித்து வந்தார்.
இது தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத் துறை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறப்பிடத்தக்கது.