நாளை எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆகலாம்.. அவர் ஆளுமை மிக்க தலைவர்.. பரபரப்பை கிளப்பும் தம்பிதுரை!
கிருஷ்ணகிரி: எதிர்காலத்தில் எடப்பாடி பழனிசாமி கூட பிரதமராகலாம் என்று அதிமுக எம்.பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக எம்.பி தம்பிதுரை பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார் அதிமுக கொள்கை பரப்புச் செலலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான தம்பிதுரை.
தம்பிதுரை பேசுகையில், “தமிழ் மொழி கலாச்சாரத்திலும், கால அடிப்படையிலும் பழமையான மொழி. தமிழ் மொழியை நாம் கொண்டாடுவதோ உதட்டளவில் பேசுவதோ மட்டும் போதாது. பேரறிஞர் அண்ணா கூறியது போல், இந்திய அரசியலமைப்பில் உள்ள 8வது அட்டவணையில் உள்ள தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கினால்தான் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும்.
அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும். ஒவரும் மக்களவைத் தேர்தலில் இதை நடைமுறைப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்து வாக்கு கேட்க வேண்டும். இதுவரை இருந்த பிரதமர்களில் மோடிதான் அதிகமாக தமிழ் பற்றி பேசுகிறார். தாய் மொழியையும் கலாச்சாரத்தையும் உண்மையாக காக்கிறோம் என யார் கூறுகிறார்களோ அவர்களுக்கு தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
பிரதமர் யார் என்பதை கருத்தில் கொள்ளாமல், எங்கள் கருத்துகளை நிறைவேற்றும் வகையில் தான் போட்டியிடுவோம், வெற்றி பெறுவோம். பாஜகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்தாலும், 2009, 2014ஆம் ஆண்டு தேர்தல்களில் தனித்து தான் போட்டியிட்டோம். அதில் 2009 தேர்தலில் 12 இடங்களிலும், 2014 நாடாளுமன்ற தேர்தலில், 37 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தால் தான் வெற்றி பெறுவோம் என்ற அவசியம் இல்லை.
2014க்கு பிறகு தான் நரேந்திர மோடி ஆளுமை மிக்க தலைவர் ஆனார். அதற்கு முன் அவரை குஜராத் முதல்வராகத் தான் தெரியும். நாளை எடப்பாடி பழனிசாமி கூட பிரதமர் ஆகலாம். எங்களைப் பொருத்தவரை உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை ஆளுமை மிக்க தலைவராக தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.