அடிமைப்பெண்ணை அரசியாக்கும் கல்வி! நீதிபதியான பழங்குடியின பெண்ணுக்கு வைரமுத்து கவிதை வாழ்த்து

தமிழகத்தில் நீதிபதியான பழங்குடியின பெண்ணுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல் பழங்குடியினப் பெண் நீதிபதி
சமீபத்தில் வெளியான TNPSC தேர்வு முடிவுகள் வெளியானபோது, 23 வயது பெண் ஸ்ரீபதி வெற்றி பெற்றிருந்தார்.
அத்துடன் நீதிபதியாக தெரிவான அவர், சிவில் நீதிபதியாக அமரவிருக்கும் முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமையை ஸ்ரீபதி பெற்றார்.
இளம் தாயான ஸ்ரீபதிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
வாழ்த்து
அந்த வகையில் கவிஞர் வைரமுத்துவும் தனது வழக்கமான கவிதை நடையில் ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் தள பதிவில், ‘இரும்பைப் பொன்செய்யும் இருட்கணம் எரிக்கும். சனாதன பேதம் சமன் செய்யும். ஆதி அவமானம் அழிக்கும், விலங்குகட்குச் சிறகுதரும், அடிமைப் பெண்ணை அரசியாக்கும்.
விளக்குமாறு விளங்கிய கையில் செங்கோல் வழங்கும் கல்வியால் நேரும் இவையென்றும் காட்டிய பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி. உன் முறுக்கிய முயற்சியில் இருக்கிற சமூகம் பாடம் கற்கட்டும். வளர்பிறை வாழ்த்து! ‘ என கூறியுள்ளார்.