Egg Pepper Fry : முட்டை மிளகு வறுவல் – சாதம், டிஃபன் இரண்டுக்கும் நல்ல சைட் டிஷ்!
அரைக்க தேவையானவை
மிளகு – ஒன்றரை ஸ்பூன்
பெருஞ்சீரகம் – ஒரு ஸ்பூன்
வதக்க தேவையானவை
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பெருஞ்சீரகம் – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெரிய வெங்காயம் – 2 (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
பூண்டு பற்கள் – 6
தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
(அரைக்கச் சொல்லியுள்ள மிளகுத்தூள் மற்றும் பெருஞ்சீரகம் இரண்டையும் நறநறப்பாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்)
இதை நைஸாக அரைக்க வேண்டாம். இந்த வறுவலின் ருசியும் சீக்ரெட்டும் இந்த கறகறப்பான பொடிதான். முடிந்தால் ஒரு ஸ்பூன் வறுத்த அரிசி சேர்த்து அரைத்தால் ருசி இன்னும் பிரமாதமாக இருக்கும்.
செய்முறை
முட்டைகளை போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து, ஓட்டை உரித்து அவற்றை பாதியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் எண்ணெயை விட்டு நன்றாக சூடாக்கி, பெருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து லேசாக பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.
தக்காளி சேர்த்து இது மென்மையாகும் வரை வதக்கவேண்டும். உப்பு சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், நறநறவென அரைத்த மிளகு மற்றும் பெருஞ்சீரகம் தூள் சேர்க்கவேண்டும்.
சில நிமிடங்கள் அல்லது முழு கலவையும் நீர் வற்றி காய்ந்து போகும் வரை வதக்கவேண்டும்.
இதை அடிபிடிக்காமல் கிளறவது அவசியம். பிறகு மசாலாவை டி-கிளேஸ் செய்ய சிறிது தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவேண்டும்.
இந்த மசாலாவின் மேலே நறுக்கிய முட்டைகளை வைத்து உடையாமல் அழுத்தி பிறகு இருபுறமும் மசாலா நன்கு கலக்கும்படி அவித்த முட்டை சிதையாமல் 2 நிமிடம் பிரட்டவேண்டும்.
முட்டையின் எல்லாபுறமும் மசாலா நன்கு பிடித்ததும் இப்போது இதை அடுப்பிலிருந்து இறக்கிவிடவேண்டும். ருசியான முட்டை மிளகு வறுவல் ரெடி.
சாம்பார், ரசம், புளிக்குழம்பு, மோர்க்குழம்பு என அனைத்து சாதங்களுடனும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். குழைவான பருப்பு சோறு மற்றும் ரசம் சாதத்துக்கு பக்கா ஜோடி.
இது கிட்டத்தட்ட கலவை சாதங்கள் அனைத்திற்கும் பொருத்தமான தொடுகறியாகும். இதையே ஸ்நாக்ஸ் அல்லது ஸ்டார்ட்டர் உணவாகவும் விருந்துகளில் பயன்படுத்தலாம். க்ரேவியை சிறிது நீர் சேர்த்து தளர்வாக செய்தால் இதை பூரி சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.