சென்னையில் முட்டை விலை அதிகரிப்பு: குளிர்காலம் காரணமா?
வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர், தமிழ்நாடு, கேரளத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் கொண்டாட்டம் காரணமாக நாமக்கல்லில் திங்கள்கிழமை (டிச.25) மொத்த விற்பனை சந்தையில் முட்டை விலை ₹5.80 ஆக உயர்ந்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய என்இசிசி-யின் நாமக்கல் மண்டலத் தலைவர் கே.சிங்கராஜ், “இன்னும் சில நாட்களுக்கு இதே விலையே இருக்கும்” என்றார்.
மேலும்,“நாமக்கல் மண்டலத்தில் தினமும் மொத்தம் 5.5 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது.
கோழிப்பண்ணையாளர்கள் 30% முட்டைகளை வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர், மீதமுள்ளவை உள்ளூர் மற்றும் பிற மாநில சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன” என்றார்.
மதிய உணவு திட்டத்திற்காக மாநில அரசு மூன்று கோடி முட்டைகளை கொள்முதல் செய்கிறது. நவம்பர் முதல் வாரத்தில் மொத்த விற்பனை சந்தையில் தலா ₹5.50 என நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர், சபரிமலை சீசன் என்பதால் ₹4.75 ஆக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து, குளிர்காலம் தொடங்கிய பிறகு NECC விகிதத்தை அதிகரிக்கத் தொடங்கியது.
NECC அன்றிலிருந்து வாரத்திற்கு ஐந்து பைசா வீதம் அதிகரித்தது. டிசம்பர் 18 அன்று விலை ₹5.50ஐ எட்டியுள்ளது.
இதற்கிடையில் சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.7 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.