Ekadashi Viratham: ஏகாதசி விரத மகிமை அறிவோம்!
மாதந்தோறும் ஒவ்வொரு தன்மையைப் பெற்ற ஏகாதசி வருகிறது. இவற்றில் மிகச் சிறப்பாகக் கருதப்படுவது, மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி ஆகும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, இந்த தினத்தில், விஷ்ணு கோயில்களில் “சொர்க்க வாசல்” திறக்கப்படும். அந்த வாசலில் நுழைந்து, பக்தி மனதுடன், பகவானை வேண்ட,சகல விதமான சௌபாக்யங்களும், பல நன்மைகளும் கிடைத்து, வாழ்வில் நிம்மதியைக் காணலாம் என்பது ஐதீகம்.
இதற்கு முதல் நாள் விரதத்தைத் தொடங்க வேண்டும். ஏகாதசியன்றும் விரதம் தொடரும், அடுத்த நாள் துவாதசியன்று காலை நீராடி, மஹாவிஷ்ணுவை வழிபட்டு, துளசி தீர்த்தமருந்தி,விரதத்தை முடிக்க வேண்டும். விரதம் முடிந்து, பகவானுக்கும் படைத்து விட்டு, உண்ணும் உணவில், நெல்லிக்காய், அகத்திக்கீரை, தயிர் போன்றவற்றை சேர்த்து, வயிற்றுப் புண் வராமல் தடுத்துக் கொள்வார்கள். பல வகை காய்கறிகளுடன் கூடிய இந்த சமையலை சுவையான “பாரனை” என அழைப்பர்.
ஸ்ரீ ரங்கத்தில், பகல் பத்து, ராப்பத்து உற்சவங்கள், இந்த நாளில் மிகச்சிறப்பாக நடக்கும். அப்போது, நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடல்களை, அபிநயத்துடன் பாடுவர். பார்க்க பரவசமாக இருக்கும் வைபவங்களிவை. ஏகாதசி விரதமிருந்து, உடல், மனம், ஆன்ம நலத்துடன் வாழ, பெருமாளை வழிபட்டு, சொர்க்கவாசல் வழியாகச் சென்றால், ஸ்ரீ மன் நாராயணர் அருள் கிடைக்க, வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஏகாதசி விரத மகிமையை உணர்த்தும் ஒரு புராணக் கதை உண்டு. ஏகாதசி விரதத்தை, அக்கரையாக, ஆத்ம சுத்தியுடன், அனுசரைனையாக, மனது ஒருமித்துக் கடைபிடிப்பவர் அம்பரீஷ் மன்னர். இவர் ஸ்ரீ ராமரின் வம்சத்தவர். ஒரு சமயம் ஏகாதசி நாளில், துர்வாச முனிவர் அங்கு வந்து, தான் குளித்து முடித்து, பூஜை செய்து வரும் வரை மன்னனை காத்திருந்து உணவருந்தக் கூறிச் சென்று, நீண்டநெடு நேரமாகிவிட, ஏகாதசி திதி முடிய சில வினாடிகளே இருந்தபடியால்,பெரியவர்களின் ஆலோசனைப்படி, மன்னர், சிறிது துளசி தீர்த்தம் குடித்து, விரதம் முடித்தார்.
திரும்பி வந்த துர்வாச முனிவர்,விஷயமறிந்து, கோபம் உச்சியிலேறத் தன்னை மதிக்காமல் விரதம் முடித்த மன்னனை கொல்ல பூதம் ஒன்றை ஏவ, உடனே ஸ்ரீ விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் அங்கே தோன்றி,பூதத்தைக் கொன்றதோடு,முனிவரை துரத்தத் தொடங்கியது. எதிர்பாராத, இந்த விஷயத்தால் ஆடிப்போன முனிவர்,செய்வதறியாது,திகைத்து ஓட ஆரம்பித்தார்.
சத்ய லோகத்திற்கு ஓடி, பிரம்மாவை வேண்ட,அவர் சிவனாரிடம் செல்க எனக் கூற, சிவனை வந்து பார்த்தபோது, அவரோ, ஸ்ரீ விஷ்ணுச் சக்கரமது ஆகவே, அவரிடம் செல்லப் பணிக்க, ஓடிய முனிவர் ஸ்ரீ விஷ்ணுவச் சரணடைய,
“ஏகாதசி விரதமிருக்கும்
அடியவர்களை விட உயர்ந்தவர்கள் யாருமில்லை”
என ஸ்ரீ விஷ்ணுபகவான் கூறி, முனிவரை மன்னனிடம் அனுப்ப, முனிவர் விரைந்து மன்னனிடம் வர, ஏகாதசி விரத மகிமை கொண்ட, அம்பரீஷ் மன்னன் கருணையால் உயிர் தப்பினார் முனிவர். ஏகாதசி விரத மகிமையை உணர்த்தும் கதையிது.
ஒரு வருடத்தில் 24 – 25 ஏகாதசிகள் வரும். இதில் சிறப்பானவை என்பது 3.
1.ஆனி சயன ஏகாதசி,
2.கார்த்திகை உத்தான ஏகாதசி,
3. வைகுண்ட ஏகாதசி என்பவை.
இவற்றில் வைகுண்ட ஏகாதசியில் விரதமிருந்ததால்,ஆண்டில் வரும் அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முன்னோர்கள், விரத நாட்களில்,பேசாது, அமைதி காக்கும்படியும் சொன்னார்கள். மவுன விருதம் என்பது மன உறுதியின் உச்சமாகும். மன உறுதி, வைராக்யம், உணவில் ஒழுக்கம், எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காது, வருவதை ஏற்பது போன்றவையே விரதத்திற்கான நெறி முறைகள். பக்தி பரவசம் உள் மனதில், பொங்கிப் பிரவாகிக்க, பரமனடி பார்க்க வேண்டி இருக்கும் தியானம் இது என்பர்.
ஒரு சமயம், தர்மர், வேத வியாசரை சந்தித்து, துன்பங்கள் அகல என்ன வழியென கேட்க,பதிலாக வியாசர் “அனைத்துத் துன்பங்களும் தீர,ஏகாதசி உபவாசத்தைத் தவிர வேறு வழியேதுமில்லை” எனக்கூறி, சகல சாஸ்திரக் கருத்தும் இதுவே என்றாராம்.
“காயத்ரி மந்திரம்
காசி தீர்த்தம்
ஏகாதசி விரதம்”
இவைகளுக்கு ஈடு இல்லை என்பது பெரியோர் வாக்கு. எளிதில் கடை பிடிக்கக் கூடிய, இவ்விரத பலன்கள் பற்றிக் கூறும்போது, அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பர்.
திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள அரங்க நாதருக்கு, ஏகாதசியில், வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்வர் எனவும்,இஃது வேறு எந்த ஒரு திவ்ய தேசத்திலும் இல்லாத, ஒரு விஷயம் என கூறுகிறார்கள். கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத நீலமேகப் பெருமாள் ஆலயத்திலும், செய்யாறு அருகே உள்ள, கூழமந்தல் எனும் ஊரில் அமையப் பெற்ற,ஆயிரம் ஆண்டுகள் பழைமையான, மார்கழி மாதத்திய கூடாரவல்லி விழா பிரசித்த தலமான “பேசும் பெருமாள்” கோயில்களில் வைகுண்ட ஏகாதசி மிக சிறப்பாக நடக்கும்.
சிவபெருமான் பார்வதி தேவியிடம்”ஏகாதசி விரதம் பாவங்களைப் போக்கும் உன்னத விரதமென்று கூறியதாக சொல்வர்.
சேலத்தில் பழமைவாய்ந்த கோட்டை பெருமாள் கோவிலில் இந்நாள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். வடக்கில் பல இடங்களில், இந்நாளை, கடந்த கால பாவங்களைப் போக்கி ,இனி நல்வழிகள் காட்டும் விரதம் எனக் கண்டு “பாபமோட்சனி” எனும் சிறப்புப் பெயரில் கொண்டாடுவர். உலகின் மிகப் பெரிய, கம்போடியா விஷ்ணு தலம், தாமரை வடிவில் அமைக்கப்பட்ட, ஆலயத்திலும் இந்நாள் கொண்டாடப்படுகிறதாம். தமிழக கோவில்களைவிட சுமார் 20 மடங்கு பெரிய ஆலயமும்,உலகின் பெரிய ஒரு சிறந்த வழிபாட்டுத் தலமும் இதுவே.