ஏப்ரல் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எக்கச்செக்கமா உயரப் போகுது! ஏன் தெரியுமா?
ஏப்ரல் 1, 2024 இல் இருந்து இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சற்று அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். விலை உயர்வு 10 சதவீதம் வரை இருக்காலம் என இந்திய முதலீட்டுத் தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் (ICRA) கணித்துள்ளது. நாடு முழுவதும் மின்சார இருசக்கர வாகனங்களின் விலையில் குறிப்பிடத்தக்க விலை உயர்வு காணப்படும் என்று ஐசிஆர்ஏ சொல்கிறது.
சமீப காலங்களில் மின்சார ஸ்கூட்டர் சந்தை வலுவான வளர்ச்சியை சந்தித்து வருகிறது. எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம் 2024 (EMPS) எனப்படும் புதிய திட்டத்தில் FAME-II திட்டத்தைவிட குறைவாகவே மானியம் வழங்கப்படுகிறது என்பதே விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கும் என்றும் சொல்கிறது.
FAME-II மானியத் திட்டம் மார்ச் 31, 2024 அன்று காலாவதியாவதை அடுத்து புதிய திட்டம் அமலுக்கு வரவுள்ளது. குறிப்பாக, மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான மானியம் ரூ.10,000/kWhல் இருந்து ரூ.5,000/kWh ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாகனத்திற்கான அதிகபட்ச மானியம் ரூ.10,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தற்காலிக பின்னடைவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. 2025 நிதியாண்டில் மின்சார இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த இருசக்கர வாகனச் சந்தையில் 6-8% ஐ எட்டும் என்றும் ICRA கணிக்கிறது. இந்திய அரசாங்கத்தின் EV கொள்கை மின்சார வாகனங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பது சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் EV உற்பத்தியில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் இந்த மானிதயத் திட்டங்களால் குறிப்பிடத்தக்க வகையில் பயனடைகின்றன. ஆனால், டெஸ்லா போன்ற இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்க விரும்பும் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது.
ஸ்கூட்டர் மாடல்களிலும் தாக்கம் காணப்படலாம் என்று ஐசிஆர்ஏ தெரிவித்துள்ளது. விலை உயர்வு மலிவு விலையில் கிடைக்கும் மின்சார ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். அது குறைந்த பட்ஜெட்டில் வாங்குபவர்களுக்கு எதிர்மறையானதாக அமையும். இருப்பினும், FAME-II திட்டம் காலாவதியாகும் முன், எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் பெரிய தொகையைச் சேமிக்க முடியும்.