கோவில் திருவிழாவில் மோதிக்கொண்ட யானைகள் ..!
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ஆராட்டுப்புழா ஆலயத்தில் நடைபெற்ற பூரம் உற்சவத்தில் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு 10:30 மணி அளவில் உபசாரம் சொல்லல் என்ற ஒரு சடங்கு நடைபெற்றது. இந்தகோவில் திருவிழாவில் பகவானின் திடம்பு, யானை மீது ஏற்றப்பட்டு அணிவகுப்பு நடைபெற்றது. இதில் குருவாயூரை சேர்ந்த ரவிகிருஷ்ணன் என்ற யானையின் மீது திடம்பு ஏற்றப் பட்டிருந்த நிலையில் அதன் அருகாமையில் அதன் முதல் பாகன் ஸ்ரீகுமார் (53 ) என்ற நபர் யானையை வழி நடத்தி வந்தார் .
யானையின் மீது ஆலயத்தைச் சேர்ந்த கீழ் சாந்திகள் அமர்ந்து குடை மற்றும் , ஆலவட்டம், வெஞ்சாமரம் ஆகியவற்றை பிடித்து பகவானின் திடம்பு ஏற்றப்பட்டு ஊர்வலமாக வந்தனர் . இந்த யானையின் அருகாமையில் புதுப்பள்ளி அர்ஜுனன் என்ற வேறொரு யானை உடன் வந்தது. திடீரென்று எதிர்பாராத நிலையில் , குருவாயூர் ரவி கிருஷ்ணன் என்ற யானை மிரண்டது. அத்துடன் அது தறி கெட்டு அங்கும் இங்கும் ஓட துவங்கியது
இதனை அடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் பீதி அடைந்து சிதறி ஓடினர் . வெகுவேகமாக ஓடிய ரவி சங்கர் யானை தனக்கு எதிரே திரும்பி நின்ற அர்ஜுனன் என்ற யானையின் மீது மோதியது. இதையடுத்து பதிலுக்கு அர்ஜூனன் யானையும் மல்லுகட்டியது. இதில் அர்ஜுனன் யானை மீது இருந்த கீழ் சாந்திகள் , ஆலவட்டம் வெஞ்சாமரத்துடன் கீழே விழுந்தனர். அத்துடன் பொதுமக்கள் சிலர் ஓடும்போது தடுக்கி விழுந்து காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து ஆராட்டு புழா காவல் நிலைய போலீசாரும் மற்றும் வனத்துறையினரும் விரைந்து வந்தனர். ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவர்கள் போராடி யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.