போதையில் சுற்றும் எலான் மஸ்க்.. குவியும் புகார்கள்..!
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஒவ்வொரு செயலும் தலைப்பு செய்திகளாகிவிடுகின்றன. அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போன எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூகவலைதளம் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவராக இருக்கிறார்.
இவர் அதிகளவில் போதை பொருள் பயன்படுத்துவதாக வெளியான செய்தி உலகளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
யார் இந்த எலான் மஸ்க்?: எலான் மஸ்க் உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர். அவரது சொத்து மதிப்பு 198.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். எலக்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா, விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ், சமூகவலைதளமான எக்ஸ், தி போரிங் நிறுவனம் நியூராலிங்க் மற்றும் செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்ட எக்ஸ் ஏஐ ஆகிய நிறுவனங்களின் சொந்தக்காரர் எலான் மஸ்க்.
எலான் மஸ்க் மீது என்ன புகார்?: எலான் மஸ்க் அதிக அளவில் போதை பொருள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அவரது நிறுவனங்களின் முன்னாள் மற்றும் இன்னாள் இயக்குனர்கள், மஸ்க் மன வருந்திவிட கூடாது என்பதற்காக வேறு வழியின்றி அவரோடு சேர்ந்து போதை பொருட்களை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியில், நிறுவன இயக்குனர்கள் இது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்திவில்லை என தெரிவித்துள்ளது. எலான் மஸ்க் உடனான நட்பு வட்டம் மற்றும் அதனால் கிடைக்கும் சமூக அந்தஸ்து ஆகியவற்றை இழக்க கூடாது என்பதற்காக இதை செய்வதாக தெரிவித்துள்ளனர் என அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
புகார்களுக்கு எலான் மஸ்க்கின் விளக்கம் என்ன?: சில வாரங்களுக்கு முன்பு, விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது எலான் மஸ்க் கொக்கைன், கேட்டமைன் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும் அது கவலை அளிப்பதாக நிறுவன வாரிய இயக்குனர்கள் தெரிவித்தனர் என ஒரு செய்தி வெளியானது.
மஸ்க்கின் ஆல்கஹால் மற்றும் போதை பொருள் பயன்பாடு ஆகியவற்றால் 2019ஆம் ஆண்டு நிர்வாக இயக்குநர் லிண்டா ஜான்சன் ரைஸ் பணியை ராஜினாமா செய்ததாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் எலான் மஸ்க் தன்னிடம் போதைப் பொருள் இருந்ததற்கான தடயங்கள் இதுவரை கண்டறியப்பட்டதில்லை என கூறியுள்ளார்.
எலான் மஸ்க் போதை பொருள் பயன்படுத்துவதாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை என அவரது வழக்கறிஞரும் விளக்கம் தந்துள்ளார். எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி வரும் வால்டர் ஈகாக்சன், சட்டவிரோத செயல்களை செய்வதில் விருப்பமில்லை என எலான் மஸ்க் கூறி இருந்ததாக தெரிவித்துள்ளார்.