மரகதக் கல் முருகப்பெருமான் அருளும் திருத்தலம் தெரியுமா?
மேல்மருவத்தூருக்கு தெற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நடுபழனி முருகப்பெருமான் திருக்கோயில்.
பொள்ளாச்சியை சேர்ந்த முத்துசாமி என்பவர் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வட இந்திய யாத்திரையை முடித்துக்கொண்டு அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர் கண்டிகை என்ற தலத்திற்கு வந்தார். அங்கிருந்த மலை மீது சுமார் நான்கு ஆண்டுகள் முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தார். அப்படி அவர் தவம் இருந்த காலத்தில் அவரது கனவில் குழந்தை வடிவத்தில் தோன்றிய முருகப்பெருமான், ‘பெருங்கரணையில் உள்ள மலையில் தனக்கு ஒரு கோயில் எழுப்ப வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.
அதன்படியே, பெருங்கரணை தலத்தில் உள்ள மலையை கண்டறிந்து அதன் உச்சியில் வேலாயுதத்தை நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். செடிகள், பாறை கற்களை சரி செய்து அதன் பிறகு அங்கேயே முருகன் சிலையை வைத்து சிறிய கொட்டகை அமைத்து வழிபாட்டைத் தொடங்கினர். இதற்கு ஊர் மக்கள் பெரும் ஒத்துழைப்பு தந்தனர்.
ஒரு நாள் பெய்த பெருத்த மழையால் கீற்றுக் கொட்டகை விழுந்து விட, தனி ஆலயம் எழுப்ப தீர்மானித்து சிறிய ஆலயம் ஒன்றை எழுப்பினார். இந்த மலையை சீரமைக்க முத்துசாமி சித்தர் பெரும்பாடுபட்டுள்ளார். அருகில் உள்ள ஊர்களுக்கு காவடி எடுத்து ஆடி அவர்கள் தரும் அரிசி உள்ளிட்ட காணிக்கைகளைப் பெற்றார். அதனை கொண்டு மலையை சீரமைக்கும் பணியாட்களுக்கு சமைத்துத் தந்தார். பக்தர்கள் தரும் காணிக்கைகளை திருப்பணிக்கு பயன்படுத்தினார். எவரிடமும் கையேந்தி நன்கொடை கேட்டதில்லை. குறையோடு வருபவர்களுக்கு திருநீறு தந்து குணமாக்கும் வல்லமையும் முத்துசாமி சித்தருக்கு முருகன் திருவருளால் கிடைத்தது.