பேரரசர் அக்பர், ஒரு ‘பெண் பித்தர்’…ராஜஸ்தான் பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு..!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் அமைச்சர் பஜன்லால் சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலின் போது ராஜஸ்தானிலும் தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி அமைந்துள்ளது.

அதைத்தொடர்ந்து அந்த மாநிலத்தில் பள்ளிக்கூட பாடப் புத்தகத்தை மாற்றி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அந்த பேட்டியின் போது அமைச்சர் கூறியதாவது:-

“நாம் பள்ளியில் படிக்கும் போது முகலாய அரசர் அக்பரை “அக்பர் தி கிரேட்” என்றும், சிறந்த மன்னர் என்றும் படித்து இருப்போம். நானும் அப்படித்தான் படித்தேன்.

அக்பர் தனது ஆட்சி காலத்தில் “மீனா பஜார்” என்ற பெயரில் பல பகுதிகளை அமைத்து, அங்கு வரும் அழகிய பெண்களை பிடித்து வந்து பலவந்தமாக பலாத்காரம் செய்து வந்தார். உண்மையில் சொல்வது என்றால் ‘பெண் பித்தரா’ன அக்பர், பாலியல் வன்கொடுமையாளர் (ரேப்பிஸ்ட்).

அவரை எப்படி ‘கிரேட்’ என்று சொல்ல முடியும்?. அக்பரின் பெயரை இந்தியாவில் உச்சரிப்பதே பெரிய பாவம் ஆகும். ‘வந்தேறி’யான அவருக்கும் இந்தியாவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. அவர் தொடர்பான பாடங்களை நீக்குவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்”.

இவ்வாறு அமைச்சர் மதன் திலாவர் கூறியது தற்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ராஜஸ்தான் பள்ளி ஒன்றில் இந்து மாணவி ஒருவர் சமீபத்தில்முஸ்லிம் மதத்திற்கு மாறினார். அதைத்தொடர்ந்து அந்த பள்ளியில் “லவ் ஜிகாத்” நடைபெறுவதாக குற்றம் சாட்டிய அமைச்சர், அங்குள்ள இரண்டு ஆசிரியர்களை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டது கவனிக்கத் தக்கது.

மற்றொரு பேட்டி ஒன்றில் அவர், “பாடப்புத்தகத்தில் பெரிய அளவுக்கு மாற்றம் செய்ய தேவையில்லை அதே நேரத்தில் வீர சாவர்க்கர் மற்றும் வீரசிவாஜி ஆகியோரை பற்றி பல தவறான தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன. அவை நீக்கப்பட வேண்டும்” என்றும் கூறினார்.

அமைச்சரின் கருத்து பற்றி விமர்சித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுவர்னிம் சதுர்வேதி கூறுகையில், “ராஜஸ்தானில் பள்ளி கல்வி பாடத்திட்டங்கள் கல்வியாளர்கள் மற்றும் என் சி இ ஆர் டி அமைப்பின் நிபுணர்களால் மத்திய அரசின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அவருடைய சொந்த கட்சி ஆட்சி மத்தியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த தவறுகளை செய்தார்கள் என அமைச்சர் கருதுகிறாரா?.” என கேள்வி எழுப்பினார்.

“இந்திய வரலாற்றில் மட்டுமின்றி உலக சரித்திரத்திலும் வெற்றிகரமான ஒரு ஆட்சியாளர்” என, ஓய்வு பெற்ற சரித்திர பேராசிரியர் பிரிஜ் கிஷோர் சர்மா கூறியிருக்கிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *