‘தேச ஒற்றுமையை வலுவாக்க சபதம் ஏற்போம்’ என வலியுறுத்தல்: பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உற்சாகம்
டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில் தமிழர் பாரம்பரிய முறைப்படி வெள்ளை வேட்டி அணிந்து பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ‘‘தேச ஒற்றுமையை வலுவாக்க நாம் சபதம் ஏற்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது அரசு குடியிருப்பில் நேற்று பொங்கல் விழா கொண்டாடினார். அவரது அழைப்பை ஏற்று, பிரதமர்நரேந்திர மோடி இதில் கலந்துகொண்டார். தமிழர் பாணியில் வெள்ளை வேட்டியுடன், கோட் மற்றும் சால்வைஅணிந்திருந்த பிரதமர், அலங்கரிக்கப்பட்ட பந்தலில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானையை வணங்கிவிட்டு, அதில் சர்க்கரையை கலந்து மகிழ்ந்தார். அருகே கட்டப்பட்டிருந்த பசுங்கன்று மீது மலர்களை தூவி வணங்கி, வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தார்.
பிறகு, அங்கிருந்த சிறிய மேடையில் ஏறிய பிரதமர், கைகளை கூப்பி ‘‘வணக்கம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’’ என்று தமிழில் வாழ்த்து கூறியதும், அனைவரும் உற்சாக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, இந்தியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
இன்றைய பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு தந்த முருகன்ஜிக்கு நன்றி.என் குடும்பத்தினர், நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வதுபோல உணர்கிறேன்.
புனித நாளான பொங்கல் அன்று தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் குதூகலம் நிலவுகிறது. அனைவர் வாழ்விலும் சுகமும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக நிலைத்திருக்க பிரார்த்தனை செய்கிறேன்.
மகர சங்கராந்தி, பஞ்சாபிகளின் ‘லேஹரி’, அசாமின் ‘பிஹு’ என அனைத்து பண்டிகைகளுக்காகவும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் பருவத்தில் அறுவடை செய்ததை கடவுளின் காலடியில் வைத்து வணங்குவது நமது பாரம்பரியம். இந்த அனைத்து உற்சவத்தின் பாரம்பரியத்திலும், நமக்கு அன்னம் வழங்கும் விவசாயிகள் போற்றப்படுகின்றனர்.
சிறுதானியங்கள், தமிழ் கலாச்சாரத்தில் இணைந்துள்ளன. சிறுதானியங்களுக்கு நாம் ஆதரவு அளித்து வளர்ப்பதன் மூலம் 3 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.
‘தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு’ என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். ‘நல்ல விளைச்சல், மெத்த படித்தவர்கள், நியாயமான வியாபாரிகள் ஆகிய மூன்றும் இணைந்ததுதான் தேசம்’ என்பதுதான் இதன் அர்த்தம். இதில்அரசியல்வாதிகளை திருவள்ளுவர் குறிப்பிடவில்லை. இது நம் அனைவருக்கும் அவர் அளிக்கும் செய்தி.
தமிழகத்தில் பொங்கல் நாளில் பெண்கள் தங்கள் வீடுகள் முன்பு புள்ளி வைத்து, கோலமிடுகின்றனர். அதில் பல வண்ணங்களை நிரப்புகின்றனர்.நம் நாட்டின் பல தரப்பு மக்களும் இந்த கோலத்தை போன்றவர்கள். நாட்டின் வெவ்வேறு மூலையிலும் இருந்தாலும், உணர்வுபூர்வமாக ஒன்றிணைவதால், நமது சக்தி அழகான உருவம் பெறுகிறது.
‘ஒரே பாரதம் உன்ன பாரதம்’ எனும் தேசிய உணர்வை பொங்கல் பண்டிகை தருகிறது. 2047-ம் ஆண்டுக்குள் மாபெரும் வளர்ச்சி அடைகிற பாரதம், அனைத்தையும்விட பெரியசக்தியாக மாறும். நம் தேச ஒற்றுமையை வலுவாக்க, பொங்கல் நாளில் மீண்டும் சபதம் ஏற்க வேண்டும்.
தமிழக கலைஞர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளை பார்க்கும்போது, நம்மை தமிழர்களாகவே உணர்ந்து மகிழ்கிறோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர்பியுஷ் கோயல், ஆளுநர்கள் தமிழிசை சவுந்தரராஜன் (தெலங்கானா), சி.பி.ராதாகிருஷ்ணன் (ஜார்க்கண்ட்), தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள்,பேராசிரியர்கள் என தமிழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நடன இயக்குநர் மாஸ்டர் கலா குழுவினர்உள்ளிட்ட பல பிரபல கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை, பார்வையாளர்களுடன் அமர்ந்து பிரதமர் மோடி ரசித்துப் பார்த்தார்.