விராட் கோலி சகாப்தம் முடிவு? 2 வீரர்களால் மாறிய இந்திய டெஸ்ட் அணி.. இனி அவங்க காலம் தான்

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகள் என்றாலே விராட் கோலியை சுற்றித் தான் இந்திய அணி தனது திட்டங்களை வகுக்கும். கேப்டனாகவும், கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் மூத்த வீரராகவும் கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகி இருக்கிறார். அவர் இல்லாமல் எப்படி இந்திய அணி வெற்றி பெறும் என்ற கவலை பலருக்கும் இருந்தது. ஏற்கனவே, அனுபவ டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் புஜாரா, ரஹானே அணியில் இல்லாத நிலையில், விராட் கோலிக்கு அடுத்து சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருந்த கே எல் ராகுலும் முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் காயத்தால் விலகினார்.
இதை அடுத்து இந்தியா வெற்றி பெற வாய்ப்பே இல்லை என பலரும் நினைத்த நிலையில் இந்தியா இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் இளம் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து தன் வரவை கிரிக்கெட் உலகில் அழுத்தமாக பதித்து இருக்கிறார்.
விராட் கோலி, கே எல் ராகுல் போல இல்லாமல் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் ஆடக் கூடியவர் என்பது தான் இதில் முக்கிய விஷயம். டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் இனி அதிரடி பேட்டிங்கை நோக்கித் தான் நகர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் ஜெய்ஸ்வால் இந்திய அணியின் எதிர்காலமாக மாறி இருக்கிறார்.
அடுத்து முக்கியமான வீரராக கருதப்படுபவர் சர்ஃபராஸ் கான். அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடி இருந்தாலும் அந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து இருக்கிறார். அதில் முதல் முறை ஜடேஜாவின் தவறால் ரன் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ஆட்டமிழக்காத நிலையில் இந்தியா டிக்ளர் செய்தது.
அந்த வகையில் பார்த்தால் அவர் மிகத் திறமையான பேட்ஸ்மேன் என்பதை காட்டி இருக்கிறார். ஏற்கனவே, அவர் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவித்து சாதித்து இருக்கும் நிலையில் அவரும் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறார். சர்ஃபராஸ் கானும் அதிரடி பேட்ஸ்மேன் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
விராட் கோலி இன்னும் ஐந்து ஆண்டுகள் கூட டெஸ்ட் கிரிக்கெட் ஆடக் கூடும். அவருக்கான இடம் இந்திய அணியில் உள்ளது. ஆனால், சச்சின் டெண்டுல்கர் இருக்கும் போதே எப்படி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்திய அணியில் தங்கள் முத்திரையை பதித்தார்களோ, அதே போல இப்போது ரோஹித் சர்மா, விராட் கோலி அணியில் இருக்கும் போதே ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், சுப்மன் கில் போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் முத்திரையை பதித்து இருக்கிறார்கள். இனி அவர்கள் தங்களுக்கான சகாப்தத்தை இந்திய கிரிக்கெட்டில் துவங்க இருக்கிறார்கள்.