உள்நோக்கத்துடன் வழக்குகளை கையில் எடுக்கும் அமலாக்கத்துறை – உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராக பணி புரிந்து வந்த அங்கித் திவாரி என்பவர், மருத்துவர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசி, அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மிரட்டில் லஞ்சம் கேட்டுள்ளார். அதன்படி, மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்றபோது, அங்கித் திவாரியை திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் கையும்களவுமாக கைது செய்தனர்.

இதையடுத்து, அவர் தொடர்புடைய இடங்கள், அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அங்கித் திவாரி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான வழக்கில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர் விசாரணை நடத்தி குற்ற பத்திரிக்கை தயார் செய்து வருகின்றனர். இதனிடையே, அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் அங்கித் திவாரி மீது டெல்லி அமலாக்கத்துறை ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அங்கித் திவாரியிடம் துறை ரீதியாக தங்களது கட்டுப்பாட்டில் விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறையின் மனுவை திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதேபோல், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மனு மீது இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அங்கித் திவாரி கைது தொடர்பான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் சில வழக்குகளை கையில் எடுப்பதாக தெரிகிறது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவ்வாறு உள்நோக்கத்துடன் எடுக்கும் வழக்குகளில் நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாத; பழிவாங்கும் போக்குடன் அமலாக்கத்துறை செயல்படுவதை தடுக்க புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *