28 ரன்களில் 4 முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்த இங்கிலாந்து… ரன்கள் சேர்க்க திணறல்

557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி 28 ரன்களில் முக்கியமான 4 பேட்ஸ்மேன்களை இழந்துள்ளது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் முழுவதுமாக இருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசம் அடைந்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்களும், இங்கிலாந்து அணி 319 ரன்களும் எடுத்திருந்தது. 2 ஆவது இன்னிங்ஸில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதில் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 236 பந்துகளில் 12 சிக்சர் மற்றும் 14 பவுண்டரியுடன் 214 ரன்கள் குவித்தார்.
இதைத் தொடர்ந்து 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஸாக் கிராவ்லே மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களத்தில் இறங்கினர். டக்கெட் 4 ரன்கள் எடுத்திருந்தபோது, ரன் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பும்ராவின் வேகத்தில் கிராவ்லே எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
ஆலி போப் 3 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோ 4 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 11.1 ஓவரில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் எடுத்திருந்தபோது 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இந்திய அணி தரப்பில் ரவிந்திர ஜடேஜா 2விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 500 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க வேண்டும். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. இதனால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.