தோனி மனைவி குறித்து இங்கிலாந்து வீரர் கமெண்ட்.. இனி தான் கச்சேரி இருக்கு.. பொளந்து கட்டும் ரசிகர்கள்
தோனியின் மனைவி சாக்ஷி குறித்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் ட்விட்டரில் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது. கிராலி 29 ரன்களுடனும், ரெஹான் அஹ்மத் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 28 ரன்கள் எடுத்து 6வது முறையாக அஸ்வின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணி விளையாடியுள்ள 4 இன்னிங்ஸ்களிலும் தொடக்கம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. பென் டக்கெட் மற்றும் கிராலி இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு குறைந்தபட்சம் 50 ரன்களையாவது சேர்த்துவிடுகிறார்கள். எந்த பவுலராக இருந்தாலும், எப்படியான பிட்ச் இருந்தாலும் இவர்களை கட்டுப்படுத்துவது இந்திய பவுலர்களுக்கு கொஞ்சம் கடினமாக அமைந்துள்ளது.
அதிலும் பென் டக்கெட் எளிதாக பவுண்டரிகள் மூலம் ரன்களை விளாசி வருகிறார். முதல் போட்டியில் 35 மற்றும் 47 ரன்களை விளாசியுள்ள பென் டக்கெட், 2வது போட்டியில் 21 மற்றும் 28 ரன்களை சேர்த்துள்ளார். இந்த நிலையில் 29 வயதாகும் பென் டக்கெட், 11 ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட ஒரு ட்வீட் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் இந்திய ரசிகர்கள் டக்கெட்டை பொளந்து கட்டி வருகின்றனர்.
இந்திய முன்னாள் கேப்டன் தோனி தனது நீண்ட நாள் காதலியான சாக்ஷியை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அதன்பின் சாக்ஷியின் புகழும் உச்சத்திற்கு செல்ல, அவரின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் எண்ணிக்கை 5.7 மில்லியனாக உள்ளது. ஐபிஎல் தொடரின் போது சிஎஸ்கே போட்டிகளை பார்க்க சாக்ஷி நேரில் வருவார். அப்போது கேமராமேன் அடிக்கடி சாக்ஷியின் ரியாக்ஷன்களை ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவார்.
இந்த நிலையில் சாக்ஷி குறித்து இங்கிலாந்து அணியின் பென் டக்கெட், “Dhoni’s girlfriend/wife is top drawerrrrr” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். டாப் டிராயர் என்றால் பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் தரத்தை குறிக்கிறது. இதன் மூலமாக சாக்ஷியை டக்கெட் எப்படி வர்ணித்துள்ளார் என்பது புரிய வருகிறது. 2013ஆம் ஆண்டு பென் டக்கெட் இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
2010ஆம் ஆண்டிலேயே தோனி – சாக்ஷி திருமணம் செய்தனர். ஜாம்பவான் வீரரின் மனைவி குறித்து வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக இருந்த போது டக்கெட் இப்படி கமெண்ட் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தோனியின் ரசிகர்கள் பென் டக்கெட் செயலுக்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.