இங்கிலாந்து அணியால் ஒன்றும் செய்ய முடியாது.. அஸ்வினை தொடுவது சாதாரணமல்ல.. முன்னாள் வீரர் அதிரடி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 5-0 அல்லது 4-0 என்ற கணக்கில் வெல்லும் என்று முன்னாள் வீரர்களான பார்த்தீவ் படேல் மற்றும் பிரக்யான் ஓஜா கணித்துள்ளனர்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே இந்திய அணி ஐதராபாத் மைதானத்தில் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில், நேற்றிரவு இங்கிலாந்து அணி வீரர்களும் ஐதராபாத் வந்திறங்கியுள்ளனர். 2012-12ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்திற்கு பின் இங்கிலாந்து அணியால் இந்திய மண்ணில் தொடரை கைப்பற்ற முடியவில்லை.

ஆனால் இந்திய அணி கடந்த முறை இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அதிர்ஷ்டவசமாக இங்கிலாந்து அணி தப்பியது. இந்திய அணியை சூழலை கணக்கிட்டு கொரோனா பரவலை காரணம் காட்டி ஒரு டெஸ்ட் போட்டியை ஒத்தி வைத்தது. இதனால் ஓராண்டுக்கு பின் அந்த டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டு, டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் பேஸ் பால் அணுகுமுறை இந்திய மண்ணில் எடுபடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் பேசுகையில், இந்திய அணி 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற முடியும். அதனால் இந்திய அணி 5-0 என்று இங்கிலாந்து அணி வீழ்த்த திட்டமிடும்.

கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணிலும் மிகச்சிறந்த வெற்றியை பெற்றுள்ளது. அதனால் இந்திய அணி அதன் அணுகுமுறையை மாற்ற தேவையில்லை. இங்கிலாந்து அணி புதிய யுக்திகளுடன் டெஸ்ட் தொடரை அணுகவுள்ளது. பேஸ் பால் திட்டம் இங்கு எடுபடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் இந்திய மண்ணில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், பேஸ் பால் எடுபடுவது சந்தேகம் தான். அதில் இந்திய ஸ்பின் அட்டாக் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருடன் பலம் வாய்ந்ததாக உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா பேசுகையில், இங்கிலாந்து அணி அவர்களின் பேஸ் பால் அணுகுமுறையில் நிச்சயம் நம்பிக்கையுடன் இருப்பார்கள். ஆனால் ஒரேயொரு திட்டத்துடன் களமிறங்குவது அந்த அணிக்கு பின் விளைவுகளை கொடுக்கும். நிச்சயம் அடுத்தடுத்த திட்டங்கள் தேவை. ஏனென்றால் இது ஒன்றும் பாகிஸ்தான் அல்ல. இந்திய மைதானங்கள் பேட்ஸ்மேன்களுக்கும், ஸ்பின்னர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *