Ennore Issue : எண்ணூரில் அம்மோனியா கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலை தற்போது இயங்குகிறதா? கோரமண்டல் நிறுவனம் விளக்கம்!

சென்னையை அடுத்த எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் அமைந்துள்ள கோரமண்டல் இண்டா்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு திரவ அமோனியம் வாயு கசிந்துள்ளது. கடலுக்கு அடியில் இருந்து தொழிற்சாலைக்கு வரும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக இந்த கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வாயுக் கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து அப்பகுதியில் இருந்து மக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினா்.
வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். தொடர்ந்து பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனா். இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் வாயு கசிந்தது உறுதி செய்யப்பட்டது.
ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m3 ஆக இருக்க வேண்டிய அமோனியா, 2090 microgram/m3 ஆகவும், கடலில் 5 mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா, 49 mg/L இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் எனவும் மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், சென்னை – எண்ணூர் அருகே உள்ள பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஆலை வாயுக் கசிவு ஏற்பட்ட பைப்லைனை அடையாளம் கண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், வாயு கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அமோனியா வாயுக்கசிவை தொடர்ந்து ஆலையை மீண்டும் இயக்குவதற்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுள்ளதாக வெளியாகிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது கோரமண்டல் நிறுவனம். சென்னை, எண்ணூரில் அம்மோனியா கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலை தற்போது இயங்கவில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆணைப்படி, உரிய சோதனைகளை மேற்கொண்டபிறகே, ஆலை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோரமண்டல் நிறுவனம் அறிவித்துள்ளது.