EPFO: வருங்கால வைப்பு நிதிக்கு 8.25% வட்டி.. நிதியமைச்சர் கையில் தான் எல்லாம்..!!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புச் சனிக்கிழமை, 2023-24 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.25% ஆக உயர்த்தப்படுவதாக EPFO நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் EPF கணக்கில் இருக்கும் பணத்திற்குக் கூடுதல் வட்டி வருமானம் கிடைக்க உள்ளது.
இந்தியாவில் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மத்திய அரசு பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாமானிய மக்கள் பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் அதிகப்படியான மக்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் ஈபிஎப் கணக்கு மீதான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது மத்திய அரசு. இந்த ஒரு அறிவிப்பு மூலம் மாத சம்பளக்காரர்கள் அனைவரையும் கவர முடியும். ஆனால் தற்போதைய வட்டி உயர்வுக்குத் தேர்தல் மட்டும் தான் காரணமா என்றால் இல்லை.
மத்திய அரசு ஈபிஎப் கணக்கு மீதான வட்டி விகிதத்தை 2023-24 ஆம் ஆண்டுக்கு 8.25% ஆக உயர்த்தியுள்ள நிலையில், இது முந்தைய ஆண்டில் 8.15% ஆகவும், 2021-22 இல் 8.10% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி விகித உயர்வு மூலம் சுமார் 6.5 கோடிக்கும் அதிகமான EPFO சந்தாதாரர்கள் பலன் அடைய உள்ளனர்.
இந்த ஆண்டு EPFO முதலீட்டில் சிறப்பான வருமானம் கிடைத்துள்ளது மூலம் இந்த வட்டி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. EPFO அமைப்பு EPF கணக்கில் வரும் பணத்தை அரசு பத்திரங்கள், பங்குச்சந்தை எனப் பல பிரிவுகளில் முதலீடு செய்து வருகிறது இதில் கிடைக்கும் வருமானத்தைத் தான் வட்டி வருமான EPFO சந்தாதாரர்களுக்கு அளிக்கப்படுகிறது.
கடந்த ஒரு வருடத்தில் பங்குச்சந்தை முதலீடும் சரி, அரசு பத்திரங்கள் முதலீடும் சரி அதன் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான வருமானத்தைக் கொடுத்துள்ளது. இதன் வாயிலாகவே தற்போது பிஎப் கணக்கு மீதான வட்டி விகிதத்தை 2023-24 ஆம் ஆண்டுக்கு 8.25% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையிலான EPFO இன் மத்திய டிரஸ்டி குழு, சனிக்கிழமையன்று EPFO அமைப்பின் 235வது நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டி விகித உயர்வை முன்வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கைக்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் அளிக்க வேண்டும், அதன் பின்பு தான் வட்டி விகிதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து EPFO வட்டி விகிதத்தை வரும் நிதியாண்டின் பிற்பகுதியில் அதன் சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கும்.