மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவுக்கு பேச்சுக்கு இபிஎஸ் கண்டனம்!
பெங்களூரு ப்ரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1-ம் தேதி அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இது தொடர்பாக ஒருவரை கைது செய்து, பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு, தேசிய புலனாய்வு முகமை ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி மத்திய அமைச்சர் ஷோபா பேசியது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது” என்று குற்றம் சாட்டினார். ஷோபா கரந்தலாஜேவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கண்டனத்தில், “தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே அவர்களின் வெறுப்புப் பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம். இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுக்களை இனியும் யாரும் பேசாத வண்ணம் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர், “ அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். பிரதமர் முதல் தொண்டர்கள்வரை, பாஜகவில் உள்ள அனைவரும் இதுபோன்ற கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த வெறுப்புப் பேச்சை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.