வரும் 24ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை துவங்குகிறார் இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வாக்குகளை சேகரித்து வருகிறார்.

திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து, எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்பது அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. திமுகவிலும் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வருகிற 22ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து பிரச்சாரத்தை துவக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தனித்தனியாக தங்கள் தலைமைகளின் கீழ் கூட்டணி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி தனது இருப்பை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் கூட்டணி இறுதியாவதற்கு முன்பும், வேட்பாளர்கள் அறிவிப்பிற்கு முன்பாகவும் தனது தேர்தல் சுற்றுப்பயண விவரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகிற 24ம் தேதி திருச்சியில் உள்ள நவலூர் குட்டப்பட்டு, வண்ணாங்கோவில் பகுதிகளில் நடைபெறும் பொது கூட்டங்களில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தை துவக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 26ம் தேதி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி, 27ம் தேதி கன்னியாகுமரி மற்றும் தென்காசியிலும், 28ம் தேதி விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்திலும், 29ம் தேதி காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரிலும், 30ம் தேதி புதுச்சேரி மற்றும் கடலூரிலும், 31ம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது முதல் கட்ட பிரச்சார திட்டமாகும். இதன் பின்னர் இரண்டாவது கட்ட பிரச்சார திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதிக்குள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் ஆகியவற்றை அதிமுக இறுதிசெய்துவிடும் என்பது இந்த அறிவிப்பு காட்டுவதாக உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *