பொங்கல் பரிசாக தர வழங்கிய ரூ.1.22 லட்சம் பணத்துடன் எஸ்கேப் ஆன ரேஷன் கடை ஊழியர்.. போலீசார் வலைவீச்சு!
கோ வை: பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்காக பணத்துடன் ரேஷன் கடை ஊழியர் எஸ்கேப்பான நிலையில், போலீசார் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சிரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில், பொங்கல் பரிசுடன் ரூபாய் 1000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வருமான வரி செலுத்துவோர், மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா ரேஷன் அட்டைதாரர்கள் தவிர்த்து, மற்றவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகை, ரேஷன் அரிசி வாங்கும் எல்லோருக்கும் கிடைக்கும் என பொங்கல் பரிசு டோக்கன் வாங்க காத்திருந்த மக்கள், லிஸ்டில் தங்கள் பெயர் இல்லை எனச் சொல்லப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து பலத்த கோரிக்கைகள் எழுந்ததை தொடர்ந்து, நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், டோக்கன் பெறாதவர்களுக்கு பொங்கல் பரிசு எப்படி வழங்கப்படும் என்பது பற்றி தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை.
பொங்கலுக்கு முன்னதாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் முடிந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம் என இருந்தவர்களுக்கு தற்போது பொங்கல் பரிசு மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் தொகுப்பு வாங்காதவர்கள் பற்றிய விபரங்களை அரசுக்கு அனுப்பிவிட்டதாகவும், இனி கிடைக்காது என்றும் நியாய விலைக் கடை ஊழியர்கள் தெரிவித்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 11 லட்சத்து 4942 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதற்கு சம்மந்தப்பட்ட ரேசன் கடை ஊழியர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இதில் 10 லட்சத்து 31 ஆயிரத்து 876 ரேசன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்ட நிலையில், 73 ஆயிரத்து 66 கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகையான ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படவில்லை.