போட்டிப்போட்டு விலையைக் குறைக்கும் EV நிறுவனங்கள்.. ஓ, இதுதான் காரணமா..?

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சந்தையைக் கைப்பற்றுவதற்கான போட்டி நாளுக்கு நாள் கடுமையாகி வருகிறது. மத்திய அரசு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்குக் கிடைக்கும் மானிய திட்டத்தை நீட்டிக்காத நிலையில், இதன் விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் EV சந்தையில் கடுமையான போட்டி நிலவுகிறது.

பெட்ரோலில் இயங்க கூடிய IC Engine கொண்ட ஸ்கூட்டர் விற்பனை உடன் போட்டிப்போட, எலக்ட்ரிக் இரு-சக்கர வாகன (E2W) உற்பத்தியாளர்கள் தங்கள் மாடல்களின் விலைகளைக் கணிசமாகக் குறைத்துள்ளனர். இதனால் இரு சக்கர வாகன பிரிவில் பெரும் போட்டி நிலவுகிறது.

டாப் EV நிறுவனங்கள்: ஓலா எலக்ட்ரிக், ஆதர் எனர்ஜி, ஓகாயா ஈவி மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்குச் சொந்தமான சேடக் டெக்னாலஜி உள்ளிட்ட இரு-சக்கர வாகன பிரிவில் உள்ள முன்னணி EV நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் இதன் வாகனங்களின் விலையைக் குறைக்கும் போக்கில் இணைந்துள்ளன.

Ola விலை குறைப்பு: பவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா எலக்ட்ரிக் தனது S1 Pro, S1 Air மற்றும் S1X+ மாடல்களின் விலைகளை ரூ.25,000 வரை குறைத்துள்ளது, இதன் விளைவாக முன்பதிவுகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல், ஆதர் எனர்ஜி தனது 450S மாடலின் விலையை ரூ.20,000 குறைத்துள்ளது, பஜாஜ் ஆட்டோவின் சேடக் ஸ்கூட்டர் இப்போது போட்டிக்கு உகந்த விலையில் கிடைக்கிறது.

EV ஸ்கூட்டர் விற்பனை: ஜனவரியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 26 சதவீதம் அதிகரித்து 81,608 யூனிட்கள் விற்பனையான போதும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதுவரை மொத்த இரு-சக்கர வாகன சந்தையில் 4.5 சதவீதம் மட்டுமே உள்ளன.

EV முக்கியப் பிரச்சனை: ஏற்கனவே எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோர் மத்தியில் தொலைவு கவலை (range fear), பெட்ரோல் வாகனங்களை விட ஒப்பீட்டளவில் அதிகமான விற்பனை விலை, போதுமான சார்ஜிங் கட்டமைப்பு இல்லாதது ஆகிய தடைகளை எலக்ட்ரிக் வாகனத் துறை எதிர்கொண்டு வருகிறது.

என்ட்ரி லெவல் வாகனங்கள்: இருப்பினும், இந்தச் சவால்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, சில எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் என்ட்ரி லெவல் வாகனங்களின் விலைகளை 15-17 சதவீதம் வரை கணிசமாகக் குறைத்துள்ளனர்.

EV ஸ்கூட்டர் விலை குறைய என்ன காரணம்: EV துறை நிறுவனங்கள் விலை குறைப்புக்கான முக்கியக் காரணங்களைத் தொழில்துறை வல்லுநர்கள் பட்டியலிடுகின்றனர். இதில் முதல் இடத்தில் இருப்பது லித்தியம் பேட்டரி விலை குறைப்பு தான், அதைத் தொடர்ந்து செலவு மேம்பாட்டு உத்திகள், அதிகரித்த உள்நாட்டு உற்பத்தி (உதிரிபாகங்கள், தொழில்நுட்பம்) போன்ற பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு விலை குறைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

முக்கியப் பிரச்சனை: எவ்வாறெனினும், இத்தகைய தீவிர விலை மாற்ற உத்திகள் மூலம் இத்துறை நிறுவனங்களின் லாபம் என்பது இன்னும் எட்ட முடியாத இலக்காகவே உள்ளது.

டாடா EV கார்: எலக்ட்ரிக் கார் பிரிவில், சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் தனது இரண்டு கார்களின் விலையை ரூ. 1.2 லட்சம் வரை குறைத்துள்ளது, டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் EV கார் தயாரிப்பில் முதன்முறையாக வெட்டப்பட்டது.

Nexon.ev இன் விலை ₹1.2 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் long range கார் இப்போது ரூ.16.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. Tiago.ev இன் விலை ரூ.70,000 வரை குறைக்கப்பட்டுள்ளது, அடிப்படை மாடல் இப்போது ரூ.7.99 லட்சத்தில் தொடங்குகிறது. பேட்டரி செலவு குறைவதே இந்த முடிவுக்குக் காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ப்ளூம்பெர்க் NEF வருடாந்திர லித்தியம்-அயன் பேட்டரி விலை குறித்த கணக்கெடுப்பின் படி எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தும் லித்தியம் பேட்டரி பேக் விலை இந்த ஆண்டு ஒரு கிலோவாட்-க்கு 139 டாலராகக் குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இதன் விலை 161 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த வருடத்தைக் காட்டிலும் லித்தியம் பேட்டரி பேக் விலை சுமார் 14% சரிந்துள்ளது.

இதேபோல் சீனாவின் பேட்டரி உற்பத்தி மட்டுமே சர்வதேச அளவிலான மொத்த தேவையைத் தாண்டியது, இதனால் உலகளவில் லித்தியம் பேட்டரி ஓவர்சப்ளை அளவீட்டை தொட்டு விலை குறைந்துள்ளது. இதனால் தான் தொடர்ந்து எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையத் துவங்கியுள்ளது. இதன் முதல் விக்கெட் டெஸ்லா.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *