3,000 ஆண்டுகளுக்கு பிறகும் எம்.ஜி.ஆர். புகழ் நிலைத்து நிற்கும்! நன்றி மறக்காத திருநாவுக்கரசர்!
எம்.ஜி.ஆர். நினைவுநாளான இன்று அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி, எப்போதும் தாம் நன்றி மறக்கமாட்டேன் என்பதை உணர்த்தியுள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்.
தமிழக அரசியல் வரலாற்றில் 27 வயதில் துணை சபாநாயகர் பதவியில் அமர்ந்த பெருமைக்குரியவர் திருநாவுக்கரசர். அவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் எம்.எல்.ஏ. சீட் கொடுத்து அரசியலில் வளர்த்தெடுத்து அமைச்சர் பதவியை வாரி வழங்கி முகவரி கொடுத்தவர் எம்.ஜி.ஆர். இதனால் தான் எம்.ஜி.ஆர். மறைந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவரது பிறந்தநாள், நினைவு நாளன்று நன்றி மறக்காமல் நினைவஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார் திருநாவுக்கரசர்.
தனிக்கட்சி, பாஜக, காங்கிரஸ், என பலக் கட்சிகளுக்கு சென்றாலும் எம்.ஜி.ஆர். மீதான நன்றியை மட்டும் அவர் மறந்ததே இல்லை. இதனிடையே இன்று எம்.ஜி.ஆர். நினைவு நாள் அஞ்சலி செலுத்திய திருநாவுக்கரசர், இன்னும் 3,000 ஆண்டுகள் கழித்தும் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். புகழ் நிலைத்து நிற்கும் என பெருமையோடு கூறினார். இருப்பது காங்கிரஸ் கட்சி என்ற போதும் எம்.ஜி.ஆரை விட்டுக்கொடுக்காமல் பேசி கவனம் ஈர்த்துள்ளார் திருநாவுக்கரசர்.
தாம் மட்டும் வராமல் தனது மகன் ராமச்சந்திரனையும் எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி செலுத்த அழைத்து வந்திருந்தார். எம்.ஜி.ஆரின் பெயரைத் தான் தனது மூத்த மகனுக்கு சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டவன் என்று சொல்வதில் தனக்கு எந்த தயக்குமும் இல்லை எனவும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இதனிடையே மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தை மதிக்க வேண்டியது ஆளுநரின் கடமை என்று பாடமெடுத்த திருநாவுக்கரசர், தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஏன் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென்றால், அப்போது தான் மற்ற மாநில அரசுகளும் தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதியாக பல கோடி ரூபாயை வழங்க முடியும் என்றும் விளக்கம் அளித்தார்.