இனியும் திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது : எடப்பாடி பழனிசாமி..!

மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “முதலமைச்சர் ஸ்டாலின், மதுரைக்கென அறிவித்த பல திட்டங்கள் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. டைடல் பார்க் அறிவிப்பு வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகளாகி விட்டன. நிதி ஒதுக்கி பணிகள் துவங்கவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட குடிநீர் திட்ட பணியும் சுணக்கமாக உள்ளது.

அதிமுக ஆட்சியின் திட்டங்களை கானல் நீராக பார்க்கிறது திமுக அரசு. விமான நிலைய ஓடுதள விரிவாக்கம், மெட்ரோ ரயில் பணிகளும் கிடப்பில் உள்ளன. விருதுநகரில் ஜவுளி பூங்கா அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம். நாங்கள் கொண்டு வந்த திட்டத்துக்கு அவர்கள் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.” என்றார்.

மேலும், “திமுக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அந்த கூட்டணியிலிருந்து எந்தெந்த கட்சிகள் வெளியேறுகின்றன என பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் அறிவித்த பின்னரே கூட்டணி முடிவாகும். பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. 2014-ல் ஜெயலலிதா பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை. மாநிலத்திற்கு எதிரான பிரச்சினைகள் வருகிற போது, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் நமக்குப் பாதிப்பு ஏற்படுகிறது.

அதனால் தான் அதிமுக சுயமாக முடிவெடுத்து இப்போது தேர்தலைச் சந்திக்கிறது. தேர்தல் சீட் அடிப்படையில் வாரிசு அரசியலைத் தீர்மானிக்க முடியாது. தலைமைக்கு யார் வருகிறார்கள் என்பதை பொறுத்து தான் முடிவாகும். திமுக தான் வாரிசு அரசியல் செய்கிறது. குடும்ப கட்சி அது.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்த பின்னர் எப்படி முடக்க முடியும்? ஓபிஎஸ் ஆசை நிராசையாக தான் முடியும். ஏ.வி.ராஜூ ஏற்கெனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். அவருடைய கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து விட்டனர்.

மேகேதாட்டு விவகாரத்தில் நீதிமன்ற அவதூறு வழக்குப் போட்டோம். திராணி இருந்தால் இந்த அரசை செய்யச் சொல்லுங்கள். மேகேதாட்டு அணை விவகாரத்தில் துரோகம் செய்தது திமுக அரசு. அவர்களின் ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.” என்றார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *