‘இரவு 2 மணி வரை சண்டை காட்சி என்றாலும் அசர மாட்டார்’: விஜயகாந்த் நினைவுகள்
நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்று (டிசம்பர் 28) மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் 150 படங்களுக்கும் மேல் நடித்தவர். நடிகர் சங்க தலைவராக சிறப்பாக செயல்பட்டவர். நடிகர் சங்கத்தில் அவரது காலம் பொற்காலமாக கூறப்படுகிறது. உடன் நடிக்கும் நடிகர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரையும் சமமாக மதித்தவர்.
இந்தநிலையில், டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் விஜயகாந்த் குறித்து இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சமணன் பகிர்ந்துக் கொண்ட தகவல்களை இப்போது பார்ப்போம். அந்த வீடியோவில், விஜயகாந்த் திரைத்துறையில் அனைவருக்கும் சிறந்த நண்பராக இருந்தார். உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் எல்லோராலும் எளிதாக அணுகக் கூடியவர்.
தயாரிப்பாளர்கள் விரும்பக் கூடிய நண்பராக இருந்தவர் விஜயகாந்த். தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்க வேண்டும், எந்தக்காரணம் கொண்டும் நஷ்டம் வந்துவிடக் கூடாது என கவனமாக இருப்பவர். காலையில் 9 மணி முதல் இரவு 2 மணி வரை தயங்காமல் நடிப்பவர். புதிய திருப்பம் படத்தின் சண்டை காட்சியில் இரவு 2 மணி வரை நடித்துக் கொடுத்தவர். அவரை எந்த தயாரிப்பாளரும் குறை சொன்னதில்லை.
விஜயகாந்த் உடன் 16 படங்களில் நடித்த நளினி கூறுகையில், என்னை முதல்முறை பார்த்தபோதே, நீ நல்லா வருவ என வாழ்த்தியவர் விஜயகாந்த அண்ணா. காதல் காட்சிகளில் நடிக்கும்போது நான் அண்ணா என கூப்பிடுவதால் இருவருக்கும் நடிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கும். நடித்து முடிக்கும் வரை அண்ணா என கூப்பிடக் கூடாது என என்னிடம் கூறினார். எனக்கும் எனது கணவருக்கும் பிரிவு வந்தப்போது எனக்கு நேரில் வந்த ஆறுதல் கூறி, நான் இருக்கேன் என்று கூறியவர் விஜயகாந்த், என்று கூறியுள்ளார்.
வடிவுக்கரசி கூறுகையில், அவர் சாதாரண மனிதர் இல்லை, மாமனிதர். சூட்டிங்கிற்கு கூடுதலாக ஆட்கள் வந்தால் அவர்களுக்கு உணவுச் செலவை விஜயகாந்த் பார்த்துக் கொள்வார். கூடவே எல்லோருக்குமே சாப்பாடு வாங்கிக் கொடுப்பார். நாலு வார்த்தை இங்கிலீஷில் பேசினால், என்னை திட்டுறீங்கனு தெரியுது எனச் சொல்வார். சாப்பாடு, சம்பளம் என அனைத்தையும் பார்த்துக் கொள்வார்.