நம்ம வாஷிங்டனை டீமில் எடுத்தால் கூட பரவாயில்லை இவரைப் போய் எடுத்து வச்சுருக்கீங்க – ரவி சாஸ்திரி
இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா அணித் தேர்வில் செய்த தவறை சுட்டிக் காட்டி விமர்சனம் செய்து இருக்கிறார் முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டம் போட்டு களமிறங்கி இருக்கிறது. அணியில் முக்கிய மாற்றமாக காயமடைந்து ஓய்வில் இருக்கும் கே எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் ரஜத் படிதார் மற்றும் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டனர். அத்துடன் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜை தொடரில் இருந்தே நீக்கிவிட்டு, முகேஷ் குமாருக்கு இரண்டாவது டெஸ்ட்டில் களமிறங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணியே வெறும் ஒரு வேகப் பந்துவீச்சாளர் போதும் என முடிவு செய்து முதல் போட்டியிலும், இரண்டாவது போட்டியிலும் ஒரு வேகப் பந்துவீச்சாளர் மற்றும் நான்கு சுழற் பந்துவீச்சாளரை களமிறக்கி உள்ள நிலையில், இந்திய அணி முதல் டெஸ்ட்டில் இரண்டாவது வேகப் பந்துவீச்சாளரால் எந்த பயனும் இல்லை எனத் தெரிந்தும் பும்ராவுடன் இரண்டாவது வேகப் பந்துவீச்சாளராக முகேஷ் குமாரை அணியில் சேர்த்தது.
போட்டி துவங்கும் போதே அணித் தேர்வு சரியில்லை என விமர்சனம் செய்தார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. அவர் கூறுகையில், முகேஷ் குமாரால் உங்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? அவருக்கு பதிலாக சுழற் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்து இருந்தால் கூட கூடுதலாக பேட்டிங்கிலும், சில ஓவர் பந்துவீச்சிலும் உதவி இருப்பார் என்றார்.
ரவி சாஸ்திரி கூறியது போன்றே இரண்டாவது டெஸ்ட்டில் முகேஷ் குமார் 7 ஓவர்கள் வீசி 44 ரன்கள் கொடுத்து இருந்தார். ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அவரால் அணிக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. கேப்டன் ரோஹித் சர்மா செய்த தவறான அணித் தேர்வு குறித்து ரவி சாஸ்திரி சரியாக கூறி இருக்கிறார். மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது ஒரு வேகப் பந்துவீச்சாளருடன் களமிறங்குவாரா ரோஹித் சர்மா?