ஓலாகிட்டகூட இப்படி ஒரு இ-ஸ்கூட்டர் இல்ல.. ஹைட்ரஜன் பவர்டு எலெக்ட்ரிக் டூ-வீலரை உருவாக்கிய இந்திய நிறுவனம்!
வார்ட்விசார்டு இன்னோவேஷன்ஸ் மற்றும் மொபிலிட்டி (Wardwizard Innovations & Mobility) நிறுவனத்தின் மற்றுமொரு அங்கமான ஜாய் இ-பைக் (Joy e-Bike) நிறுவனம் இந்தியாவில் ஓர் தனித்துவமான திறன் கொண்ட இரண்டு சக்கர வாகனத்தை வெளியீடு செய்திருக்கின்றது. அந்த வாகனம் ஓர் ஹைட்ரஜன் பவர்டு மின்சார வாகனம் (Hydrogen Powered e-Scooter) ஆகும்.
இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உலகின் அறிவிக்கப்படாத தலைவனாக ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் இருக்கின்றது. இந்த நிறுவனம்கூட இன்னும் ஹைட்ரஜனை மின்சாரமாக மாற்றி இயங்கும் வசதிக் கொண்ட இரண்டு சக்கர வாகனங்களின் உற்பத்தியை தொடங்கவில்லை.
இந்த நிலையிலேயே ஓலா மற்றும் பிற ஜாம்பவான் நிறுவனங்களுக்கு முன்னோடியாக இருக்கும் வகையில் ஜாய் இ-பைக் எனும் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம், ஹைட்ரஜன் பவர்டு எலெக்ட்ரிக் டூ-வீலரை தயார் செய்து, அதனை தற்போது வெளியீடும் செய்திருக்கின்றது. இந்த வாகனம் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற விபரங்கள் வெளியிடப்படவில்லை.
நாட்டில் ஹைட்ரஜன் வாகனங்களுக்கான கட்டமைப்பு இப்போதும் தொடக்க புள்ளியிலேயே இருக்கின்றது. ஆகையால், ஜாய் இ-பைக்கின் ஹைட்ரஜன் பவர்டு மின்சார வாகனம் விற்பனைக்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகும் என கூறப்படுகின்றது. வார்டு விசார்டு நிறுவனம் ஹைட்ரஜன் ஃப்யூவல் பவர்டு எலெக்ட்ரிக் டூ-வீலர் மற்றும் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றையும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 வாயிலாக வெளியீடு செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இரண்டு மின்சார இரு சக்கர வாகனங்களின் வெளியீட்டைத் தொடர்ந்து, “எலெட்ரிக் வாகன உற்பத்தியில் முக்கிய பங்கினை வகிக்கும் செல் பேட்டரி தொழில்நுட்பத்திற்கு பதிலா மாற்று தொழில்நுட்பத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் தங்கள் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் ஜாய் இ-பைக் தெரிவித்து இருக்கின்றது.
தற்போது காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது கான்செப்ட் மாடல் மட்டுமே ஆகும். இதன் உற்பத்தி பணிகள் எப்போது தொடங்கும், இதன் விற்பனைக்கான வருகை எப்போது அமையும் மற்றும் இதன் சிறப்புகள் என்ன என்பது போன்ற எந்த முக்கிய விபரங்களையும் ஜாய் இ-பைக் அறிவிக்கவில்லை. அதேவேளையில், அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இந்த வாகனம் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வாகனத்தை வழக்கமான மின்சார வாகனங்களைப் போல சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இருக்காது. பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போல ஹைட்ரஜன் மையங்களுக்கு சென்று ஹைட்ரஜன் செல்லை நிரப்பிக் கொண்டால் போதுமானது. இதனை மின்சாரமாக மாற்றி அந்த வாகனம் இயங்கிக் கொள்ளும்.
மேலும், ஹைட்ரஜனை மின்சார மாற்றும்போது எந்தவொரு காற்றை அசுத்தப்படுத்தும் மாசும் வெளியேறாது. அசுத்தப்படுத்தமான காற்று மாசுக்கு பதிலாக இந்த வகை வாகனங்கள் வெறும் நீாவியையே வெளியேற்றும். இது சுற்றுச்சூழலுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான ஓர் டூ-வீலரையே ஜாய் இ-பைக் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது.
இது விற்பனைக்கு வரும் எனில் மின்சார இரண்டு சக்கர வாகன உலகில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கும் கார்களின் விற்பனை ஏற்கனவே உலக நாடுகள் சிலவற்றில் தொடங்கிவிட்டன. இந்தியாவிலும் வெகு விரைவில் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயக்கம் தொடங்கப்பட இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஜாய் இ-பைக் அதன் ஹைட்ரஜன் மின்சார வாகனத்தை வெளியீடு செய்திருக்கின்றது.