எங்க அப்பா தான் முக்கியம்னு அவர்கூட இருந்தேன்.. இப்போ நான் ரெடி.. அடுத்த டார்கெட் குறித்து பேசிய – தீபக் சாஹர்

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 13 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 73 போட்டியில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் சமீப காலமாக இந்திய அணியில் விளையாடாதது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தாலும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது பார்வையும் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரின் மீதே உள்ளது. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களை கொண்ட காம்பினேஷன் அடிப்படையில் டி20 உலக கோப்பை தொடருக்கான அணி தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இதன்காரணமாக தற்போது அனைத்து வீரர்களும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பினை பெறுவதற்கு முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வகையில் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரும் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு தேசிய கிரிக்கெட் அகடாமிக்கு சென்று உடற்தகுதியையு மேம்படுத்தியுள்ளார்.
கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய தீபக் சாஹர் தனது தந்தையின் உடல்நிலை காரணமாக அந்த தொடரின் பாதியிலேயே வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த தென்னாப்பிரிக்க தொடர், ஆப்கானிஸ்தான் தொடர் என அடுத்தடுத்த தொடர்களை தவற விட்டார்.