சச்சின், விராட் கோலி கூட செய்ததில்லை.. ஸ்டீவ் ஸ்மித் ஏற்றுள்ள சவால்.. தவறு செய்த ஆஸ்திரேலியா அணி?

சிட்னி: சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்டோர் கூட செய்யாத பரிசோதனை முயற்சியை ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் செய்யவுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியோடு ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார். இதன்பின் ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னரின் இடத்தை நிரப்பப் போகும் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி எழுந்தது. சில நாட்களாகவே ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் பலரும் கேமரூன் க்ரீன், பேன்கிராஃப்ட் உள்ளிட்டோரை கூறி வந்தனர். ஆனால் திடீரென ஸ்டீவ் ஸ்மித்தை தொடக்க வீரராக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
ஏனென்றால் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் ஆர்டரில் முதுகெலும்பாக இருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். நம்பர் 3யில் ஆடி வந்த அவர், லபுஷேனின் வருகையால் நம்பர் 4க்கு மாறினார். பந்தை சேதப்படுத்திய புகார் காரணமாக ஓராண்டு தடை பெற்ற ஸ்டீவ் ஸ்மித், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் வேறு லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் சராசரி 60ஐ கடந்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நன்றாக விளையாடி வரும் ஸ்டீவ் ஸ்மித்தை வைத்து எதற்காக பரிசோதனை முயற்சி செய்ய வேண்டும் என்று பலரும் அறிவுரை கூறினர். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் டேவிட் வார்னருக்கு பதிலாக மேட் ரென்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா தேர்வு குழு அறிவித்துள்ளது.