அம்பானி விரும்பி வாங்கும் காராக இருந்தாலும் சேல்ஸ் பெருசா இல்ல!! மன வருத்தத்துடன் குமுறும் கார் சிஇஓ!

பெண்ட்லீ (Bentley) கார்கள் விற்பனை கடந்த ஒரு வருடத்தில் உலகளவில் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு வித்தியாசமான காரணத்தை பெண்ட்லீ நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார். அப்படி என்ன அவர் கூறினார்? உண்மையில், எதை அவர் காரணமாக குறிப்பிட்டுள்ளார்? இந்தியாவில் விற்பனையில் உள்ள பெண்ட்லீ கார்கள் என்னென்ன? வாருங்கள் இதற்கான பதில்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சொகுசு கார்கள் விற்பனையில் நீண்ட வருடங்களாக ஈடுப்பட்டுவரும் நிறுவனங்களுள் ஒன்று பெண்ட்லீ ஆகும். இலண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பெண்ட்லீ, ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் ஓர் அங்கமாக உள்ளது. உலகின் முன்னணி லக்சரி கார் நிறுவனங்களுள் ஒன்றாக இருப்பினும், கடந்த 2023ஆம் ஆண்டில் உலகளவில் பெண்ட்லீ கார்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.

இந்த நிலையில், நிறுவனத்தின் இந்த விற்பனை சரிவுக்கான காரணத்தை பெண்ட்லீ சிஇஓ அட்ரியன் ஹால்மார்க் தற்போது தெரிவித்துள்ளார். உண்மையில் அட்ரியன் ஹால்மார்க் கூறியிருப்பது கொஞ்சம் வித்தியாசமான காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், பணக்காரர்கள் தங்களது ஸ்டேட்டஸை வெளியே காட்டக் கூடாது என நினைப்பதினால் பெண்ட்லீ கார்களின் விற்பனை குறைந்துள்ளதாக ஹால்மார்க் தெரிவித்துள்ளார்.

அதாவது, விலையுயர்ந்த கார்களை வாங்கி ஏழை, எளிய மக்களிடம் இருந்து மாறுப்பட்டு தெரியக்கூடாது என்பதற்காக பெண்ட்லீ போன்ற விலைமிக்க கார்களை வாங்க செல்வந்தர்கள் தயக்கம் காட்டுவதாக பெண்ட்லீ நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார். மேலும், உலகின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சொகுசு கார்களுக்கான அதிக வட்டி விகிதங்களும் தங்களது பெண்ட்லீ கார்கள் அதிகம் விற்பனையாகாததற்கு காரணங்களாக அட்ரியன் ஹால்மார்க் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் மொத்தம் 13,560 கார்களை பெண்ட்லீ நிறுவனம் உலகம் முழுக்க விற்பனை செய்துள்ளது. இது 2022ஆம் ஆண்டை காட்டிலும் 11% குறைவாகும். கார்கள் விற்பனை 11% குறைந்திருப்பதினால், பெண்ட்லீ நிறுவனத்தின் வருவாயும் கடந்த ஆண்டில் 13% குறைந்துள்ளது. இதன் விளைவாக, பெண்ட்லீ நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் இலாபமும் 17% சரிந்துள்ளது.

வருவாயில் இருந்து செலவீனங்கள் அனைத்தும் கழிக்கப்பட்ட பின் கிடைப்பதே ஆப்ரேட்டிங் இலாபம் ஆகும். பெண்ட்லீ கார்கள் மிக விலையுயர்ந்தவை என்பதை நான் கூறவேண்டியது இல்லை. பிரிட்டிஷ் ஸ்டைலில் சொகுசு காரை வாங்க விரும்புவோரின் சாய்ஸ் ரோல்ஸ்-ராய்ஸ்க்கு அடுத்து பென்ட்லீ கார்கள் மீதே உள்ளது.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட சொகுசு கார்களை காட்டிலும் விலையுயர்ந்த காரை வாங்க விரும்புபவர்கள் பெண்ட்லீ அல்லது ரோல்ஸ்-ராய்ஸ் பக்கமே செல்கின்றனர். இந்தியாவிலும் நிறைய பெண்ட்லீ கார் ஓனர்கள் உள்ளனர். இந்தியாவின் பெரும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி பெரிய பெண்ட்லீ கார் ரசிகர் ஆவார்.

இதனாலேயே, பெண்ட்லீ பெண்டைகா, ஃப்ளையிங் ஸ்பர், காண்டினென்டல் ஜிடி என ஏகப்பட்ட சொகுசு கார்கள் ஆகாஷ் அம்பானியிடம் உள்ளன. ஆகாஷ் அம்பானியிடம் மட்டுமின்றி, பாலிவுட் ஸ்டார்கள் அமீர்கான், ஷில்பா ஷெட்டி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் விராட் கோலியிடமும் விலையுயர்ந்த பெண்ட்லீ சொகுசு கார்கள் உள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *