டிரைவிங் லைசென்ஸ் கூட பெற தகுதியில்லாதவர்: டிரம்ப்பிற்கு நிக்கி ஹாலே பதிலடி

” ராணுவ வீரரை கிண்டல் செய்யும் டிரம்ப், அமெரிக்க அதிபர் பதவிக்கு மட்டும் அல்ல, ஓட்டுநர் உரிமம் கூட பெற தகுதியற்றவர் ” என நிக்கி ஹாலே பேசினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், தென் கரோலினா மாகாண முன்னாள் கவர்னரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே தீவிரமாக முயன்று வருகின்றனர்.

தெற்கு கரோலினாவில் நடந்த கூட்டத்தில் டிரம்ப் பேசும் போது, ” நிக்கி ஹாலேவின் கணவர் எங்கே? அவர் சென்று விட்டாரா? அவரது கணவருக்கு என்ன ஆனது? எங்கே போனார்?

மனைவிக்கு ஆதரவாக பிரசாரத்திற்கு வராதது ஏன்?” என்றார்.இதற்கு பதிலளித்து தெற்கு கரோலினாவில் நடந்த கூட்டத்தில் நிக்கி ஹாலே பேசுகையில், ” டிரம்ப்பிற்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், எனக்கு பின்னால் சொல்ல வேண்டாம். மேடையில் என்னுடன் நேரடியாக விவாதம் செய்யுங்கள். ராணுவத்தில் இருக்கும் எனது கணவர் மைக்கேலின் பணியை பார்த்து நான் பெருமைப்படுகிறேன்.

ராணுவத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் அந்த தியாகம் புரியும். 75 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகளுக்கு மனநல சோதனை நடத்தப்பட வேண்டும் என்ற உண்மையைப் பற்றி நான் நீண்ட காலமாக பேசி வருகிறேன். நீங்கள் போர் வீரரை பற்றி கிண்டல் செய்வீர்கள் என்றால், அமெரிக்க அதிபர் பதவிக்கு மட்டும் அல்ல, ஓட்டுநர் உரிமம் கூட பெற தகுதியற்றவர்.இவ்வாறு நிக்கி ஹாலே பேசினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *