எல்லாமே சுத்த பொய்.. ஸ்ரேயாஸ் ஐயர் செய்த தில்லு முல்லு.. போட்டுக் கொடுத்த என்சிஏ.. கோபத்தில் பிசிசிஐ
ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதி போட்டிகளில் இருந்து நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விலகிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஞ்சி டிராபி தொடருக்கான காலிறுதி போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது. இதில் விதர்பா – கர்நாடகா, மும்பை – பரோடா, தமிழ்நாடு – செளராஷ்டிரா, மத்திய பிரதேசம் – ஆந்திர பிரதேசம் ஆகிய அணிகள் மோதவுள்ளன. கடந்த சில மாதங்களாக ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களுக்கு இந்திய அணியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இஷான் கிஷன் ரஞ்சி டிராபியில் விளையாடாமல் ஓய்வில் இருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதும் தெரிய வந்தாது. இதன் காரணமாக காயத்தில் இல்லாத வீரர்கள் அனைவரும் கட்டாயம் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டார். சொந்த மண்ணிலேயே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாகவே ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்.
ஆனால் திடீரென ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பிடிப்பு காரணமாக ரஞ்சி டிராபி காலிறுதி போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் என்சிஏவில் உள்ள மருத்துவ பிரிவு தலைவர் நிதின் படேல் பிசிசிஐ-க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ஸ்ரேயாஸ் ஐயர் முழு ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு உடல்நிலை சரியாக உள்ளது.
அதனால் இந்திய அணியில் உள்ள வீரர்களில் யாருக்கும் புதிதாக காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாட கூடாது என்பதற்காகவே ஸ்ரேயாஸ் ஐயர் பொய் கூறியது தெரிய வந்துள்ளது. ஐபிஎல் தொடருக்கு தயாராவதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி டிராபியில் விளையாட மறுத்துள்ளதும் தெரிய வருகிறது.
ஏற்கனவே இஷான் கிஷன், தீபக் சஹர், ராகுல் சஹர், க்ருணால் பாண்டியா உள்ளிட்டோர் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகின்றனர். தற்போது அவர்களுடன் ஸ்ரேயாஸ் ஐயரும் இணைந்துள்ளார். ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுத்தால், வரும் காலங்களில் இந்திய அணியில் அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.