கண்டதெல்லாம் பொய்… காணப் போவது? மலைக்கோட்டை வாலிபன் – திரை விமர்சனம்

யாராலும் அசைக்க முடியாத பலசாலியாக இருக்கும் மலைக்கோட்டை வாலிபன் (மோகன்லால்) மல்யுத்த வீரர்களை அடித்து தன் பலத்தை நிறுவிக்கொண்டே வருகிறார்.

ஒரு கட்டத்தில் மாங்காடு மன்னன், வாலிபனால் அவமரியாதை செய்யப்படுகிறார். ஆத்திரம் அடைகிற அம்மன்னன், தன் பகுதிக்கு வந்து மல்யுத்தம் செய்து உன் பலத்தைக் காட்டு என மோகன்லாலுக்கு சவால் விடுகிறார்.

அங்கு செல்பவர் தோல்வியைச் சந்திக்காத மல்லனை அடித்து வீழ்த்தி, மாங்காட்டு மன்னனை கழுதையில் ஏற்றி ஊரைச் சுற்ற விடுகிறார். அவமானத்தால் காயப்பபட்ட அம்மன்னன் மலைக்கோட்டை வாலிபனை பழி வாங்க திட்டங்களைத் தீட்டுகிறார். அதே நேரம், மாங்காட்டில் இருந்து கிளம்பும் வாலிபன், அம்பத்தூர் மலைக்கோட்டைக்குச் சென்று அங்கு போர்த்துகீசியர்கள் ஆட்சியில் அடிமையாக இருக்கும் மக்களைக் காப்பாற்ற அரசன் மெக்காலேவை சண்டைக்கு அழைப்பதுடன் பந்தய விருப்பமாக, தான் வென்றால், அடிமையாக இருக்கும் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார். அங்கு மலைக்கோட்டை வாலிபன் அடிமை மக்களைக் காப்பாற்றினாரா? வன்மம் கொண்டு பின் தொடர்ந்த மாங்காடு மன்னன் என்ன ஆனான்? யார் இந்த மலைக்கோட்டை வாலிபன்? என்பதே மீதிக்கதை.

வழக்கம்போல் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இதுதான் கதை என ஊகிக்க முடியாத உத்தியைப் இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார். யதார்த்தமாக நகரும் கதை, படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இன்னொரு தளத்திற்குச் செல்கிறது. காலம், நிலம் எதுவும் இதுதான் எனக் கூறப்படாமல் வெட்டவெளி நிலத்தை கச்சிதமாக மலைக்கோட்டை வாலிபனுக்கான நிலமாக லிஜோ பயன்படுத்தியிருக்கிறார். உள்ளூர் சண்டை, போர்த்துகீசியர்கள் உடனான மோதல் என படத்தின் ஒட்டுமொத்த பலமும் ஒளிப்பதிவை நம்பியே இருக்கிறது. சாதாரண ஒரு காமிக் கதையை எப்படியெல்லாம் நம்ப வைத்து சினிமாவாக மாற்றலாம் என்கிற திட்டத்தில் லிஜோ வென்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு சினிமா அனுபவத்துக்கு இன்றியமையாதது ஒளிப்பதிவு பங்களிப்புதான் என்பதை லிஜோ ஜோஸ் முழுமையாக நம்பிக்கொண்டிருப்பதால் அவரின் மற்ற படங்களின் ஒளிப்பதிவை விட மலைக்கோட்டை வாலிபன் ஒரு உச்சத்தை அடைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் மது நிலகண்டணின் அகலக் காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *