EXCLUSIVE – கில் ஒரு சதத்துடன் நிறுத்தி விட கூடாது.. தேர்வுக்குழுவினர் மனதில் நிற்க இதை செய்யுங்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய அணி புதிய ஒரு அத்தியாயத்தை தொடங்க உள்ளது. விராட் கோலி, ராகுல் ஸ்ரேயாஸ் போன்ற வீரர்கள் இல்லாத நிலையில் தற்போது பெரும்பாலான இளம் வீரர்களை வைத்து இந்திய அணி ராஜ்காட் டெஸ்டில் விளையாட உள்ளது.
இந்த நிலையில் முன்னாள் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு பல அறிவுரைகளை கூறியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் தற்போது இந்திய அணி நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது.
குறிப்பாக ஹைதராபாத் டெஸ்டில் தோல்வி அடைந்த பிறகு விசாகப்பட்டினத்தில் சிறப்பான ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறார்கள். தற்போது நாம் சரியான திசையை நோக்கி இந்த தொடரில் சென்று கொண்டிருக்கிறோம். ஜடேஜா தற்போது முழு உடல் தகுதியை பெற்று அணிக்கு திரும்பிருக்கிறார். இது நிச்சயம் இந்தியாவுக்கு ஒரு நல்ல விஷயம். ஏனென்றால் கடந்த போட்டியில் சுழற் பந்துவீச்சை பொறுத்தவரை அனுபவமின்மை இந்திய வீரர்களிடம் இருந்தது.
தற்போது ஜடேஜா வந்திருப்பதன் மூலம் இந்தியாவின் சுழற் பந்துவீச்சு பலமாக மாறி இருக்கிறது. ஜடேஜா போன்ற ஒரு வீரர் பேட்டிங்,பந்துவீச்சு, பில்டிங் என மூன்று பிரிவிலும் சிறப்பாக செயல்படக்கூடியவராக இருப்பார். இது இந்திய அணிக்கு நிச்சயம் நல்ல விஷயம். இது இந்தியாவின் பலத்தை மேலும் அதிகரித்து இருக்கிறது. இங்கிலாந்து போன்ற ஒரு பலமான அணிக்கு எதிராக சர்பிராஸ்கான், ஜூரல் போன்ற வீரர்கள் அறிமுகமாவது நிச்சயம் நல்ல விஷயம்.
இப்படிப்பட்ட பலமான அணிக்கு எதிராக அவர்கள் நன்றாக செயல்பட்டால் அது தேர்வுக் குழுவினர் மனதிலும் மற்றும் ரசிகர்கள் மனதிலும் எப்போதுமே நிற்கும். கில், ஒரு நல்ல வீரராக இருக்கிறார். அவர் அனைத்து விதமான ஆடுகளங்களிலும் நன்றாக ரன் சேர்க்கிறார். ஆனால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் கொஞ்சம் தடுமாறி வந்தார்.
இரண்டாவது டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் அவர் பார்முக்கு திரும்பி இருக்கிறார் என நினைக்கிறேன்.
ஆனால் இந்த பார்மை அவர் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும். அடுத்த டெஸ்ட் போட்டிகளிலும் அவர் ரன் சேர்க்க வேண்டும். ஒரு சதத்துடன் நின்று விடக்கூடாது. அவருக்கு எதுவுமே சரியாக நடக்கவில்லை. இது போன்ற சூழலில் நன்றாக ரன் சேர்ப்பதன் மூலம் கில் அணியில் தொடர்ந்து நீடிக்க முடியும். ஃபார்ம் இருக்கும்போது பெரிய ரன்களை குவிப்பது அவசியம் என்று எம் எஸ் கே பிரசாத் கூறியுள்ளார்.