தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்தால் மூளை ஆற்றல் அதிகரிக்குமாம் – ஆய்வில் தகவல்
சிறிதளவு உடற்பயிற்சி செய்வது கூட உங்கள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதை புதிய ஆய்வு பரிந்துரை செய்கிறது. கடந்த மாதம் Journal of Alzheimer’s Disease-ல் வெளியான ஒரு ஆய்வில், கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூளை ஸ்கேன்களை ஆய்வு செய்து பார்த்ததில் ஒரு சிறிய அளவு உடற்பயிற்சி, அதாவது ஒரு நாளைக்கு ஒரு சில 1000 அடிகள் நடப்பது கூட மூளையின் ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.
மூளையின் பருமன் என்பது நமது மூளை ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக அமைகிறது. பருமன் குறைவாக இருந்தால் அது அறிவாற்றல் குறைவதை சுட்டிக்காட்டுகிறது. மேலும் இதனால் டிமென்ஷியா போன்ற நிலை ஏற்படலாம். ஆகவே மூளை பருமனை அதிகரிப்பதற்கு அல்லது பராமரிப்பதற்கு நாம் போதுமான முயற்சிகளை எடுப்பது அவசியம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஒரு நாளைக்கு 4000 அடிகள் என்ற குறைந்தபட்ச உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது கூட மூளையின் ஆரோக்கியத்தில் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நாளைக்கு 10,000 அடிகள் என்ற இலக்கை அடைவது பெரும்பாலானவர்களுக்கு எளிதான விஷயம். இதனை செய்வதன் மூலமாக நமது மூளையின் ஆரோக்கியத்தை நாம் சிறந்த முறையில் பராமரிக்கலாம்.
இந்த ஆய்வில் சராசரி 52 வயதை கொண்ட 10,125 பங்கேற்பாளர்கள் தங்களுடைய உடற்பயிற்சியின் அளவுகளை பொறுத்து மூளையின் பருமனை அளவிடுவதற்கு மேக்னெடிக் ரெசோனன்ஸ் இமேஜிங் (magnetic resonance imaging – MRI) சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
நடைப்பயிற்சி, ஓடுதல் விளையாட்டுகளில் ஈடுபடுவது அல்லது மிதமான முதல் கடினமான செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்ற, இதயம் மற்றும் நுரையீரலை குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது உந்தி தள்ளுவதற்கான உடற்பயிற்சிகளை செய்பவர்களில் மூளை பருமன் சற்று அதிகமாக இருப்பது தெரிய வந்தது.
உடற்பயிற்சியில் ஈடுபடும் பொழுது மூளைக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் மூளைக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு கிடைத்து அறிவாற்றல் செயல் திறன் மேம்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இது நரம்பு கடத்திகள் மற்றும் வளர்ச்சி காரணிகளை போன்ற கெமிக்கல்கள் வெளியிடுவதை தூண்டுகிறது. இதன் காரணமாக புதிய நியூரான்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு மூளையின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. மேலும் உடற்பயிற்சி செய்வது குறைவான வீக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட மனநிலை போன்ற ஆரோக்கியமான மூளைக்கு பங்களிக்கக் கூடிய விஷயங்களுடன் தொடர்புடையதாக அமைகிறது.
தினமும் 45 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலமாக பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய திறன், அறிவாற்றல், நினைவாற்றல் மற்றும் முடிவெடுத்தல் போன்ற விஷயங்களில் சிறப்பாக செயல்படலாம். நாள்பட்ட மனச்சோர்வு, பதட்டம் போன்றவற்றை மேம்படுத்தக்கூடிய ஆற்றலும் உடற்பயிற்சிக்கு உண்டு. எனினும் தீவிரமான உடற்பயிற்சி மூளையின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கலாம், குறிப்பாக நினைவாற்றலை பாதிக்கலாம்.
சரியான அளவு உடற்பயிற்சியில் ஈடுபடவும், அதிகப்படியான உடற்பயிற்சியை தவிர்க்கவும் நீங்கள் பொதுவான வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் :
ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான தீவிரம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சி அல்லது 75 நிமிடங்கள் தீவிரமான உடற்பயிற்சியில் ஒருவர் ஈடுபடலாம். இதனுடன் வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு தசை வலிமைப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
உங்கள் உடல் உங்களிடம் சொல்வதைக் கேட்டு, உடற்பயிற்சியின் தீவிரத்தை படிப்படியாக அதிகரிக்கவும். தினமும் ஒரே மாதிரியான பயிற்சிகளை செய்வதற்கு பதிலாக பல்வேறு பயிற்சிகளை உங்களது வழக்கத்தில் சேர்க்கவும்.
உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு உடலை கூல்-டவுன் செய்ய கூடிய டெக்னிக்ஸ்களுக்கு முன்னுரிமை வழங்கவும். இது காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
போதுமான அளவு தண்ணீர், சமச்சீரான ஊட்டச்சத்து மற்றும் தேவையான அளவு ஓய்வு போன்றவை விரைவில் மீளவும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் அவசியம்.
தனிநபரின் தேவைகள் மற்றும் ஆரோக்கிய நிலையின் அடிப்படையில் ஒருவர் என்னென்ன மாதிரியான பயிற்சிகளில் ஈடுபடலாம் என்பதை மருத்துவரின் ஆலோசனை கேட்டு புரிந்து கொள்ளலாம்.