Explained: தேர்தல் பத்திரம் என்றால் என்ன? ஏன் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது?

தகவல் அறியும் உரிமையை மீறுவதாகக் கூறி, தேர்தல் பத்திர முறை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பல மனுக்கள் மீது ஒருமனதாக தீர்ப்பு வழங்கியது.

தேர்தல் பத்திரம் என்பது என்ன?

தேர்தல் பத்திரங்கள் என்பது, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகும். கடந்த 2017-18ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான சட்டம் நிதி மசோதாவாகக் கொண்டுவரப்பட்டு, 2018 ஜனவரி 29ஆம் தேதி சட்டப்பூர்வமானது.

இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபரோ கார்ப்பரேட் நிறுவனங்களோ வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களில் அவற்றை வாங்குபவரின் பெயர், முகவரி முதலிய விவரங்கள் இருக்கும். தனிநபரோ கார்ப்பரேட் நிறுவனமோ இந்தத் தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த அரசியல் கட்சிக்கும் தேர்தல் நிதியை நன்கொடையாக வழங்கலாம்.

தேர்தல் பத்திரங்களைப் பெறும் கட்சிகள் 15 நாட்களுக்குள் பணமாக மாற்றிக்கொள்ளலாம். அப்படி மாற்றிக்கொள்ளாத பட்சத்தில் அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமரின் நிவாரண நிதிக்குப் போய்விடும்.

தேர்தல் பத்திரங்களை விற்பது யார்?

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தான் தேர்தல் பத்திரங்களை வெளியிடுகிறது. இந்தப் பத்திரங்களை நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட 29 கிளைகளில் மட்டுமே வாங்கி முடியும். ரூ.1,000, 10,000, 1,00,000, 10,00,000, 1,00,00,000 என வெவ்வேறு மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐ விற்பனை செய்கிறது.

ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு தேர்தல் பத்திர விற்பனையும் 10 நாட்களுக்கு நடக்கும். பொதுத்தேர்தல் காலத்தில் மத்திய அரசு அனுமதியுடன் கூடுதலாக 30 நாட்கள் தேர்தல் விற்பனை செய்யவும் வாய்ப்பு உள்ளது.

தேர்தல் பத்திரங்களை யார் வாங்கலாம்?

இந்திய குடிமகனாக இருக்கும் அனைவரும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். தனிநபர்களும் நிறுவனங்களும் தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக்கலாம். செல்வாக்கு பெற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் இதன் மூலம் நிதியைப் பெறலாம். ஆனால், 1951, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 29 A, பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் குறைந்தபட்சம் 1% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.

தேர்தல் பத்திர முறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருப்பது ஏன்?

தேர்தல் பத்திர முறை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி ரத்து செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், இந்தத் திட்டம் குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 19 (1) (a) பிரிவின் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதிக்கிறது என்றும் கூறியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து முழுமையான விலக்கு வழங்குவதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் போகிறது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வருமான வரிச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்களையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. தேர்தல் பத்திரங்களை வாங்குபவர் தனது அடையாளத்தை வெளியிடாமலே கட்சிகளுக்கு நிதி வழங்க இந்தத் திருத்தங்கள் உதவுகின்றன என்று கூறுகிறது.

கம்பெனிகள் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதை அனுமதித்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. திருத்தம் செய்யப்படுவதற்கு முன்பு, இந்தியாவில் நஷ்டமடைந்த நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க அனுமதிக்கப்படவில்லை

தேர்தல் பத்திர முறை ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிக்குச் சாதகமானதாக இருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறுகிறது. அரசியலில் கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறி இந்தத் திட்டத்தை நியாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

அதிகாரத்தில் உள்ள கட்சி தங்களுக்கு உதவக்கூடும் என்று ஆதாயம் பெறும் நோக்கில் ஆட்சியில் உள்ள கட்சிக்கு அதிக நிதி கிடைக்க இந்த முறை காரணமாக உள்ளது எனவும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்டேட் வங்கி மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு என்ன?

இந்தக் காரணங்களால் தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்துமாறு எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடை விவரங்களையும், நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் 2024 மார்ச் 6ஆம் தேதிக்குள் அளிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் பணமாக மாற்றாமல் வைத்திருக்கும் தேர்தல் பத்திரங்களை அவற்றை வாங்கியவர்களிடமே திருப்பித் தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம் ஸ்டேட் வங்கி அளிக்கும் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் அனைத்தையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *