ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி: என்இசிசி மண்டலத் தலைவர் தகவல்
ரஷ்யா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என்இசிசி) நாமக்கல் மண்டலத் தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
கோழி தீவனத்துக்கான மக்காச்சோளம் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும், வங்கி வட்டி விகிதம், மின்சாரக் கட்டணம், ஆட்கள் சம்பளம், பராமரிப்புச் செலவும் அதிகரித்துள்ளது. முட்டையின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், ஒரு முட்டை ரூ.6-க்கு விற்றால்தான், பண்ணைகளை லாபகரமான முறையில் நடத்த முடியும்.
எனவே, என்இசிசி அறிவிக்கும் விலைக்கு குறைவாக, தங்கள் முட்டைகளை விற்பனை செய்வதில்லை என்பதில் பண்ணையாளர்கள் உறுதியாக இருக்க வேண்டும். முட்டை தேக்கத்தை தவிர்க்க, 80 வாரத்துக்கும் மேல் உள்ள கோழிகளை விற்பனை செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம் 10 சத வீதம் முட்டைகளை ஏற்றுமதி செய்தால்தான், உள்ளூரில் முட்டைக்கு ஓரளவு கட்டுப்படியான விலை பெற முடியும். எனேவ, பண்ணையாளர்கள் தரமான தீவன மூலப் பொருட்களை உபேயாகித்து, தரமான முட்டைகளை உற்பத்தி செய்ய வேண்டும். விரைவில் இலங்கை, ரஷ்யா, துபாய், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.