முகத்தையும்,சருமத்தையும் பேணி பாதுகாக்க முகப்பொடி மற்றும் குளியல் பொடி..!!

அழகான முகத்தைப் பெறுவதற்கு இன்று பலவிதமான இராசயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். தினம் ஒரு அழகுப் பொருள்கள் என மாறி மாறி உபயோகப்படுத்தி முகத் தின் பொலிவை விரைவில் இழந்துவிடுகிறார்கள். இளவயதில் சருமம் பொலிவிழந்து, முக சுருக்கங்களுடன் தோற்றமளிக்கிறது. முகத்தையும்,சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளைப் பயன்படுத்தி நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியமான சருமத்தை ஆயுளுக்கும் பெறலாம்.

தேவையானவை:

முகப்பொடி:

உலர்ந்த மகிழம் பூ பொடி -200 கிராம் , கிச்சிலி கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, கோரைக் கிழங்கு பொடி- தலா 100 கிராம், உலர்ந்த சந்தனத்தூள் -150 கிராம்,பாசிப்பயறு -50 கிராம்.

கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவற்றை ஒன்றாகக் கலந்து அம்மியில் அல்லது மிக்ஸியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும். தினமும் குளிப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன் தூய்மையான பசும் பாலில் குழைத்து முகத்தில் தடவவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வரவேண்டும். இப்பொடியைப் பயன்படுத்தும் போது சோப்பு போடக் கூடாது. இதைத் தொடர்ந்து உபயோகப்படுத்திவந்தாலே நாளடைவில் சருமம் மென்மையாகவும் பளீரெனவும் இருக்கும்.

இதேபோல் குளியல் பொடியையும் தயாரிக்கலாம். பலவித வாசனை குளியல் சோப்புகளாலும், முகத்தில் இட்டும் பவுடர்களாலும் நாளடைவில் உடலில் ஒவ்வாவை ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. 30 வயதுக்குள் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவும் நம் ஆரோக்யத்துடன் அழகையும் அதிகரிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது இராசயனம் கலந்த உணவு வகைகளும், போதிய அளவில் நீர் அருந்தாமலும் சருமம் விரைவில் வறட்சியடைகிறது. சருமம் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவே நமது மூதாதையர்கள் பிறந்த குழந்தைகளுக்குச் சோப்பை உபயோகப்படுத்தாமல் பலவித நறு மணப் பொருள்களைச் சேர்த்துக் குளியல் பொடியாக அரைத்து உபயோகப்படுத்தி வந்தார்கள். இன்றும் பலகிராமங்களில் இத்தகைய குளியல் பொடியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

நமது சருமத்தைக் காக்கும் குளியல் பொடியை அரைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்: கொடுத்துள்ள அனைத்து பொருள்களும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்.

சோம்பு -100 கிராம்,

கஸ்தூரி மஞ்சள் -100 கிராம்

வெட்டிவேர் -200 கிராம்

அகில் கட்டை-200 கிராம்

சந்தனத்தூள் -400 கிராம்

கார்போக அரிசி -200 கிராம்

தும்மராஷ்டம்-200 கிராம்

விலாமிச்சை-200 கிராம்

கோரைக்கிழங்கு-200 கிராம்

கோஷ்டம் -200 கிராம்

ஏலரிசி -200 கிராம்

முழுபாசிப்பயறு -அரைக்கிலோ

இவை ஒவ்வொன்றையும் தனித் தனியாக நிழலில் உலர்த்தி மிக்ஸியிலோ அல்லது மிஷினிலோ கொடுத்து அரைத்து ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும் போது சோப்புக்கு பதிலாக சிறிது நீர் விட்டு குழைத்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.
வியர்வை நாற்றம் இருப்பவர்கள் மட்டுமல்ல உடலில் உள்ள சூடு கட்டிகள், சொறி, சிரங்கு, தேமல், படர் தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பருக்கள் அனைத்துமே நீங்கி நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியாக வைத் திருக்கும். ஒரு முறை உபயோகப் படுத்தினாலே இதன் மகிமை உங்களுக்கும் புரியும். இயற்கை நமக்கு அள்ளிக்கொடுத்திருக்கிறது. இயன்றவரை இவற்றைப் பயன்படுத்துவோம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *