‘ஒரு படத்தின் தோல்வி… மணிவண்ணனை யாரும் மதிக்கவில்லை’ – மனோபாலா சொன்ன அதிர்ச்சி தகவல்
ஒரேயொரு படத்தின் தோல்வியால் மணிவண்ணனை யாரும் மதிக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் கடும் முயற்சியால் திரைத்துறையில் அவர் உச்சம் பெற்றதாக மறைந்த நடிகர் இயக்குனர் மனோ பாலா கூறியுள்ளார். மணிவண்ணன் குறித்த மனோபாலாவின் பழைய வீடியோ ஒன்று கவனம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது-
கையில் பேப்பரில் இல்லாமல், அட்டை இல்லாமல் பெரும்பாலும் குறிப்புகளே இல்லாமல் மிகப்பெரிய இயக்குனராக மணிவண்ணன் தமிழ் சினிமாவில் சாதித்துள்ளார். ஆனால் தயவு செய்து அவரைப் போன்று கையில் பேப்பர், அட்டை இல்லாமல் இளம் இயக்குனர்கள் வேலை பார்க்க வேண்டாம். ஏனென்றால் மணிவண்ணன் ஒரு ஜீனியஸ். அதை நீங்கள் செய்தால் கண்டிப்பாக தவறுகள் ஏற்படும்.
மணிவண்ணன் தனது மண்டைக்குள்ளேயே படத்தை ஓட்டி பார்ப்பார். அவருக்கு டயலாக் கிடைக்கவில்லை என்றால் தம் அடித்துக் கொண்டே இருப்பார். ஒரே நேரத்தில் 8 வேலையை செய்யக்கூடியவர் மணிவண்ணன். இதுவரைக்கும் மணிவண்ணன் நன்றாக சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. அவர் மண்டையில் ஓடும் பிரஷரில் அவருக்கு சாப்பிடவே தோன்றாது.
அவருடன் இருக்கும் போதெல்லாம் எங்களுக்கு டீயும், சிகரெட்டும் தான் சாப்பாடாக இருந்தது. மணிவண்ணன் நிழல்கள் என்ற படத்திற்கு கதை எழுதினார். அந்த படம் படு தோல்வி சந்தித்தது. அதற்கு பின்னர் மணிவண்ணனுக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. யாரும் அவரை சரியாக மதிக்கவில்லை. தயாரிப்பு நிறுவனங்களில் அவருக்கு டீ கூட கொடுக்கவில்லை.
அந்த நேரத்தில் நான் அவருக்கு பெரும் உதவியாக இருந்தேன். இதேபோன்று சித்ரா லட்சுமணனும் அவருக்கு உதவியுள்ளார். இப்படி இருந்த மதிவண்ணன்தான் அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு கதை எழுதினார். உங்களுக்கே தெரியும். அந்தப் படம் எவ்வளவு பெரிய ஹிட் ஆகி, எவ்வளவு வரவேற்பை பெற்றது என்று. ஷாட் எடுப்பதற்கு மிகவும் எளிதான வகையில் மணிவண்ணன் திரைக்கதை எழுதி கொடுத்தார்.
இந்த படத்தை எம்ஜிஆர் வியந்து பாராட்டினார் என்பதெல்லாம் தனி கதை. கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் மணிவண்ணனின் தனித்திறமை வெளிப்பட்டது. என்னதான் கதை வேறொருவருடையதாக இருந்தாலும் ஷூட்டிங் லொகேஷனில் மணிவண்ணன் செய்யும் மேஜிக்குகள் படத்தை எல்லோரும் மத்தியிலும் பேச வைத்தது.
இப்படி திறமை யாரிடம் எங்கு மறைந்திருக்கும் என்று கணிக்க முடியாது. நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பதாக இருக்கட்டும். அவர்களிடம் வேலை வாங்குவதாக இருக்கட்டும். மணிவண்ணன் அதில் திறமை வாய்ந்தவர். புத்தகம் வாசிப்பதில் அதிக பிரியம் கொண்டவர் மணிவண்ணன்.
அவரது கண்ணில் எங்கு பட்டாலும் போய் புத்தகத்தை வாங்கி விடுவார். நான் அவரிடம் இதையெல்லாம் படிப்பியா என்று கேட்பேன். அதற்கு அவர் இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் எடுப்பேன். ஏதாவது ஒரு வரி நமக்கு பிடித்துப் போகும். அதன் மூலம் ஒரு கதை கிடைக்கும் என்று சொல்லுவார். இப்படி அவரைப் பற்றி பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.